சுமார் 13 வருடங்களுக்கும் மேலாக பௌத்த விகாரை ஒன்றில் போலியான பெயரில் தங்கியிருந்த தமிழ் பூசகர் ஒருவரை பலாங்கொடை கல்தொட்ட பகுதியில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்தொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டதையடுத்து இவர் பல்வேறு கிரிமினல் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவராகவும் இப்பிரதேசத்தை அண்டிய ஹம்பேகமுவ மற்றும் சுற்றுப்புறப் பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக சந்தேகப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
போலியான பெயரில் இப்பகுதியில் நீண்ட காலம் வசித்து வந்த இவரின் உண்மையான பெயர் ராமையா தம்பு விஸ்வநாதன் சர்மா எனவும் இவருக்கு 6 மொழிகளில் பேசும் திறமை இருப்பதாகவும், கல்தோட்டப்பகுதியில் பஸ் வண்டியொன்றில் பயணிக்கும் போது பயணிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட முறுகல் நிலையையடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீண்ட காலம் ஒரு பூசகராக நடித்து வந்த இவர் முழுக்கமுழுக்க பெரும்பான்மை மக்கள் வாழும் இப்பகுதியில் வசித்து வருகின்றமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இவரது விரலடையாளங்கள் இரசா யனப் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்தொட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தர்மசிறி பெரேரா தெரிவித்தார்.