* வெள்ளியன்று கல்வி அமைச்சில் இடம்பெறும்
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்து மேல்மாகாணத்தில் தற்காலிக இணைப்புப் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கல்வியமைச்சில் நடைபெறவுள்ளது.
தற்காலிக இணைப்புப் பெற்றுள்ள ஆசிரியர்களின் பிரச்சினையை இனங்கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பிரதிக் கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் பணிப்புரையில் நடைபெறும் இக்கலந்துரையாடலில் மேல்மாகாணத்தில் தற்காலிக இணைப்புப் பெற்றுள்ள சகல வட, கிழக்கு ஆசிரியர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல- இசுருபாயவில் அமைந்துள்ள கல்வியமைச்சின் பிரதிக் கல்வியமைச்சரின் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை குறித்த நேரத்தில் சமூகமளித்து இக்கலந்துரையாடலில் பங்கு கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் தற்காலிக இணைப்புப் பெற்றுள்ள வட,கிழக்கு மாகாண ஆசிரியர்கள் கடந்த பல மாதங்களாக விடுதி, உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கி நின்று மன உளைச்சலுக்கு மத்தியில் சம்பளமின்றி பணியாற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.