பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, தமக்கு இந்நியமனத்தில் உடன்பாடு இல்லையென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்தது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பிரியானி விஜயசேகர நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதவியிலிருந்து ஓய்வுபெற்றதை அடுத்தே கித்துலேகொட பாராளுமன்ற பதில் செயலாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனக்கான பதில் செயலாளர் நியமனத்தை கித்துலேகொட உறுதிப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகமாக முன்னரும் ஒருமுறை பணியாற்றியுள்ள இவர் தற்போது அரசியலமைப்பு பேரவையின் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் இரு பதவிகளையும் தான் தொடர்ந்து வகிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பதில் பாராளுமன்ற செயலாளர் நியமனத்தில் தமக்கு உடன்பாடில்லையென ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பு பேரவை இயங்காத நிலையில் 14 நாட்களுக்கு மாத்திரமே அவர் பதில் செயலாளராக பணியாற்ற முடியுமெனவும், இதுபற்றி தமது கட்சி தீவிர கவனம் செலுத்திவருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.