* ஐ.தே.க. தெரிவிப்புரொஷான் நாகலிங்கம்
முஸ்லிம் காங்கிரஸுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இணக்கப்பாடு எட்டாதவிடத்து நாம் ஏற்கனவே தயாரித்திருந்த வேட்பாளர் பட்டியலின் படி வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
இந்த அரசு பதவியேற்றது முதல் இன்று வரை அரிசி 136 சதவீதத்தாலும் கோதுமை மா 230 சதவீதத்தாலும் டீசல் மற்றும் பெற்றோல் என்பன 150, 149 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளது. அதுபோல், ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பொருட்களின் விலைகள் என்றுமில்லாதவாறு உயர்வடைந்து, மக்கள் தமது அன்றாட வாழ்வை கொண்டு நடத்த முடியாது பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.
அதேபோல், நாட்டில் நடமாடும் மர்மமான வெள்ளை வானினால் ஆட்கள் கடத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். இதன் காரணமாக பயத்தின் நிமித்தம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமன்றி, ஊடகவியலாளர் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியாதவாறு தாக்கப்படுகின்றனர், வெட்டப்படுகின்றனர். மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத இந்த அரசு ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு நாட்டை அதலபாதாளத்துக்கு இட்டுச் செல்கின்றது.
இதனைக் கண்டித்து எமது கட்சி நாளை புதன் கிழமை முற்பகல் 10 மணிக்கு 120 நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. எனவே, அரசுக்கு தமது எதிர்ப்பை மக்கள் காட்டுவதற்கு எம்முடன் இணையுமாறு கோருகின்றோம்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பிரியானி விஜயசேகர ஓய்வுபெற்றுள்ள நிலையில், இப்பதவிக்கு தம்மிக்க கித்துல்கொடவை நியமிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது முற்றிலும் அரசியலமைப்புக்கு முரணானது. தமது நலனுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நியமனத்தை எமது கட்சி எதிர்க்கின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவை இன்று (நேற்று) இரவு எமது கட்சி முஸ்லிம் காங்கிரஸுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையின் பின்னர் எடுக்கவுள்ளோம். வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இறுதித் தினம் புதன்கிழமையாகும். அவர்களுடன் இணக்கப்பாடு எட்டப்படாதவிடத்தும் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் நாளை புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் மேற்கொள்ளவுள்ளோம்.
கிழக்கில் எமது கட்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களிக்க தயாராகவுள்ளனர். அம்பாறையில் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதியாகையால் நாம் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டு முதலமைச்சரை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும்.
புலிகளுக்கு ஆதரவானவர்களை வேட்பாளர் பட்டியலில் எமது கட்சி சேர்த்துள்ளதாக அரசாங்கம் எம்மீது சேறு பூசுகின்றது. தமிழர்கள் எல்லோரும் புலிகளாவெனக் கேட்கின்றோம். தமிழ்க் கூட்டமைப்பு தேர்தல் மூலம் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் இருக்கின்ற நிலையில், இவர்கள் ஏன் மாகாண சபை உறுப்பினர்களாக இருக்கக்கூடாதென நான் கேட்கின்றேன்.
இதேநேரம், ஐ.தே.க.வுக்கு கிழக்கில் வெற்றிபெற முடியாதெனவும் அரசு கூறுகின்றது. அங்கு நீதியான, சுதந்திரமான ஜனநாயக முறையிலான தேர்தல் அங்கு இடம்பெறுமாயின் அங்கு நாமே வெற்றிபெறுவோம். கிழக்கில் 22 வருடம் சேவையாற்றிய அதிரடிப்படையினரை அரசாங்கம் ஏன் வாபஸ்பெறுகின்றது. அவர்கள் அங்கு பரீட்சயம் உள்ளவர்கள். அங்கு ஆயுதக் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடியில் ஈடுபடுவதற்கே இதனை அரசு மேற்கொள்கின்றது.
நான் ஐ.தே.க.வில் எனது பல்கலைக்கழக காலம் முதல் இணைந்து செயற்பட்டு வருகின்றேன். எமது கட்சிக்குள் முரண்பாடு இல்லையென்பதுடன் கட்சிக்கு விரோதமாக சுகபோகங்களுக்காக நான் ஒருபோதும் கட்சி தாவப்போவதில்லை. இது குறித்து யாருடனும் பேச்சுவார்த்தை நான் மேற்கொண்டதில்லையென ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.