ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெறுகின்றனவா என்பதை அவதானித்த சர்வதேச புகழ்பெற்ற நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீனக் குழுவினர் நேற்று திங்கட்கிழமையுடன் பணிகளை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இச்சுயாதீனக்குழுவினரின் அவதானிப்புப் பணிகள் நேற்றுடன் நிறுத்தப்பட்ட போதும் அவர்களின் அலுவலகம் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை இயங்குமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இக்காலப்பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கையொன்றை இக் குழுவினர் சமர்ப்பிப்பர். அத்துடன், இறுதியான பகிரங்க அறிக்கையொன்றையும் அவர்கள் வெளியிடவுள்ளனர்.
சர்வதேச புகழ்பெற்ற நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீனக் குழுவில் இந்திய முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். பகவதி, பிரான்சை சேர்ந்த நீதிபதி ஜேன் பியரி கொட், இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி தாருஸ்மன், அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தல் ஈ.ஜின் டியூவே, நெதர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் சீஸ் பாசிர், பங்களாதேஷை சேர்ந்த டாக்டர் கமால் ஹுசெய்ன், கனடாவைச் சேர்ந்த பேராசிரியர் புரூஸ் மத்தியூஸ், சைப்பிரஸை சேர்ந்த அன்டிரியாஸ் மாவ்ரோ மாற்றிஸ், பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் சேர் நைஜஸ் ரொட்சி, அவுஸ்திரேலியாவின் பேராசிரியர் ஐவின் சியரர், ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் யோசோ யொகொட்டா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.