இலங்கையில் மீண்டும் போர்நிறுத்தமொன்றைக் கொண்டுவருவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழகத்தில் உள்ள சகல கட்சிகளும் ஒன்றுபட்டு வலியுறுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், தமிழகத்தில் கட்சிகளின் தலைவர்களை இது தொடர்பாக நாளை முதல் சந்தித்துப் பேசவிருப்பதாக சென்னையில் இருந்து நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.
இலங்கை விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் ஒருமித்த குரலில் அவற்றின் நிலைப்பாடுகளை வெளியிட வைப்பதற்கான தனது முயற்சி வெற்றியளிக்கும் வரை எந்தத் திரைப்படத்திலும் நடிக்கப்போவதில்லை என்று ரஜனிகாந்த் அறிவித்திருக்கிறாராம். படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள `குசேலன்', அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாராயுடன் நடிக்கவிருந்த `ரோபோ' ஆகிய படங்களை இடைநிறுத்துமாறு தயாரிப்பாளர்களை ரஜனிகாந்த் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டாரின் இந்த முயற்சிக்கு தென்னிந்தியத் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் தங்களது ஆதரவைத் தெரிவிப்பதற்காக வடிவேல், விவேக், செந்தில் மற்றும் மும்தாஜ், ரகசியா, கவுண்டமணி ஆகியோர் நேற்று மாலை ரஜனிகாந்தின் போயஸ்காடின் வாசஸ்தலத்துக்கு விரைந்ததாகவும் அவர்களை காவலர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.