* பிரிட்டிஷ் பாராளுமன்றத் தூதுக்குழுவிடம் தமிழ் கூட்டமைப்பு வேண்டுகோள்
பி.ரவிவர்மன்
கிழக்கில் படையினரின் துணையுடன் போலித் தேர்தலை நடத்தியிருக்கும் அரசாங்கம், வடக்கில் பாரிய போர் நடவடிக்கையொன்றை முன்னெடுத்து வருவதாகவும் இதனால் ஏற்பட்டுவரும் மனிதப் பேரவலத்தை தடுத்துநிறுத்த சர்வதேச சமூகம் உடனடியாக முன்வர வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பை விடுத்திருக்கிறது.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நான்கு பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட் கிழமை நண்பகல் இடம்பெற்றது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நண்பகல் ஒரு மணி தொடக்கம் 2.30 மணி வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி., மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரி.கனகசபை ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டின் பிரதான பிரச்சினையான இனநெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதற்கான சமாதான முயற்சிகள் அனைத்தையும் முற்றாகவே கைவிட்டுள்ள அரசாங்கம், இராணுவ நிகழ்ச்சி நிரல்களையே முதன்மைப்படுத்தி வருகின்றது.
ஏ-9 வீதி மூடப்பட்டு வன்னிப் பெரு நிலப்பரப்பு மற்றும் யாழ்.குடாநாட்டுக்கான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ளனர்.
இதனைவிட வன்னிப் பெரு நிலப்பரப்பை நோக்கி பல்வேறு முனைகளிலும் பாரிய படைநகர்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன், வன்னிப்பெரு நிலப்பரப்பில் தினமும் விமானக் குண்டு வீச்சுகளும் இடம்பெற்று வருகின்றன. இதனால் அப்பாவிப் பொதுமக்கள் தினமும் உயிரிழக்கின்றனர்.
போக்குவரத்துத் தடை, பொருளாதாரத் தடை, விமானக் குண்டு வீச்சு உட்பட ஆட்கடத்தல், கைது, காணாமல்போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களால் தமிழ் மக்கள் பாரிய அழிவுகளை தினமும் எதிர்கொண்டுள்ளனர்.
கிழக்கில் போலியான தேர்தல் ஒன்றின் மூலம் அங்குள்ள மக்களை மட்டுமல்ல சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றிய அரசாங்கம், வடக்கில் பாரிய மனிதப் பேரழிவொன்றுக்கான நிகழ்ச்சி நிரலை மேற்கொண்டு வருகின்றது.
தமிழர் தாயகப் பிரதேசமான இணைந்த வடக்கு, கிழக்கை பிரித்து நடத்தப்படும் எந்தவொரு தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் போட்டியிடாது.
சமாதானப் பேச்சுவார்த்தை மூலமான நீதியானதும் நேர்மையானதுமான தீர்வொன்றைக் காண்பதற்கு சர்வதேச சமூகம் உதவமுன்வர வேண்டுமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.