இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் பிரதம ஆலோசகர் எம்.கே.நாராயணன் சிறிலங்காவின் இனப்பிரச்சினை சம்பந்தமாகத் தெரிவித்துள்ள கருத்துகளில் சிறிலங்கா வேறு நாடுகளிடமிருந்து யுத்த ஆயுதங்கள், யுத்த விமானங்கள் மற்றும் கனரக யுத்த உபகரணங்களை வாங்குவதை இந்தியா அனுமதிக்க முடியாதென்றும் சிறிலாங்க அரசு அங்கு வாழும் தமிழர்களை நீதியான முறையில் நடத்த வேண்டுமெனவும் சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு யுத்த மூலம் சிறிலங்கா அரசு தீர்வுகாண முயல்வதை இந்தியா எதிர்க்கிறது எனவும் கூறியிருந்தார். அவர் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு முக்கிய இடம்கொடுத்து ஆசியப் பிராந்தியத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் பரந்த பிரசாரத்தை மேற்கொண்டிருந்தன.
ஆயினும், இதற்கு முன்னர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கூறியுள்ள தகவல்களில், இந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் புலிகள் இயக்கத்தினர் மறைந்திருந்து செயற்படுவதாகவும் இரகசியமாக யுத்தப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இவ்வாறு தமிழ்நாட்டிலும் கேரளாவில் புலிகளின் ஊடுருவலைத் தடுக்க ஊடனே இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமெனவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு எம்.கே.நாராயணன் முதலில் புலிகள் இயக்கத்தவர்களுக்கு எதிராக இந்திய அரசு தீவிரமாக செயற்பட்டு நடவடிக்கை எடுக்குமெனக் கூறிவிட்டுப் பின்னர் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்திய அரசு எதிர்க்கும் எனக் கூறியிருப்பது அவருடைய ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரட்டை நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுவதாக சுட்டிக்காட்டி ஆசியாவின் முக்கிய பத்திரிகைகள் சில செய்திகளை வெளியிட்டிருந்தன.
லங்காதீப வெளிநாட்டுப் பத்திரிகைகளின் பகுதி 30.03.2008