பிரித்தானிய பிரபுக்கள் சபையில் புலிகள் இயக்கப் பயங்கரவாதத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருபவரும் அவ்வாறே சபைக்கு வெளியேயும் புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருபவருமாகிய "நெஸ்பி" பிரபுவானவருக்கு அண்மையில் அங்குள்ள புலிகள் இயக்கத்தினர் தரப்பிலிருந்து உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நெஸ்பி பிரபுவே இதுபற்றி அச்சமடைந்த நிலையில் தமக்கு பிரிட்டனிலுள்ள புலிகளால் ஏற்படக்கூடிய உயிர் ஆபத்து பற்றி ஸ்கொட்லாந்து பொலிஸ் பிரிவுக்கு அறிவித்தல் கொடுத்துள்ளார்.
இவ்வாறு நெஸ்பி பிரபு ஸ்கொட்லாந்து பொலிஸ் பிரிவுக்கு தெரிவித்துள்ள தகவல்களில் புலிகள் இயக்கத்தினர் அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள செய்தியிலேயே இவ்வாறு அச்சுறுத்தலை விடுத்திருப்பதாக அறிவித்துள்ளார். அவருக்கு புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் அனுப்பிய மேற்படி மின்னஞ்சலில் உயிர் எச்சரிக்கையை மட்டுமன்றி அவரை அவமதிக்கும் வகையிலும் வாசகங்களுடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நெஸ்பி பிரபுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேற்படி நெஸ்பி பிரபு பிரிட்டிஷ் பிரபுக்கள் சபையில் புலிகள் இயக்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு வந்ததுடன் மட்டுமன்றி ஷ்ரீலங்கா பிரச்சினை சம்பந்தமாக நடந்துவரும் பல்வேறு கருத்தரங்குகள், கூட்டங்களிலும் புலிகள் இயக்கத்தை கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் வந்துள்ளார். தற்போது அவருக்கு மின்னஞ்சல் மூலம் புலிகள் இயக்கத்தினர் அச்சுறுத்தல் விடுத்தும் அவமதித்தும் இருக்கும் நிலையில் நெஸ்பி பிரபு தெரிவித்திருக்கும் தகவலில் இவ்வாறு புலிகள் தரப்பிலிருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை எனவும் தொடர்ந்து புலிகள் இயக்கப் பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படப்போவதாகவும் அவர்களுக்குப் பயந்து தனது நிலைப்பாட்டை நிறுத்த முடியாது எனவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
லங்காதீப: 30.03.2008