இந்திய கிரிக்கெட்டின் `ரஜினிகாந்த்' தோனியென்று இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கப்டன் மகேந்திரசிங் தோனியை முன்னாள் கப்டன் ஷ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.
ஐ.பி.எல்.சென்னை `சுப்ப கிங்ஸ்' அணியின் வீரர்களை அறிமுகப்படுத்தும் கண்கவர் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது சென்னை அணியின் கப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் சென்னை அணியின் நல்லெண்ணத் தூதுவர் கிருஷ்ணமாச்சாரி ஷ்ரீகாந்த், நட்சத்திர தூதுவர்களைான நடிகர் விஜய், நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை நந்தம்பாக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடந்த இந்த விழாவில் சென்னை `சுப்பகிங்ஸ்' அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
அப்போது பேசிய ஷ்ரீகாந்த், "இந்திய கிரிக்கெட்டின் ரஜினிகாந்தாக தோனி விளங்குகிறார். இருவரும் தங்களுக்கென ஒரு ஸ்ரைலும், கவர்ச்சியும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் உடையவர்கள்" என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதைக்கேட்டு அங்கிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து பேசிய தோனி "திறமையான ஓர் அணியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இளமையின் துள்ளலும், பழுத்த அனுபவத்தையும் உடைய அணியாக சென்னை சுப்ப கிங்ஸ் அணி திகழ்கிறது. ஐ.பி.எல்.போட்டியின் இறுதிச்சுற்றை அடைந்து கிண்ணத்தை உறுதியாக வெல்வோம்" என்றார்.