ஒலிம்பிக் தீபம் நேற்று திங்கட்கிழமை காலை பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் வந்து சேர்ந்தது.
கிரீஸிலிருந்து விஷேட விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபத்தை ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் லியு கி கையில் ஏந்தியபடி விமானத்திலிருந்து இறங்கினார்.
ஒலிம்பிக் தீபத்திற்கு அங்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. சீனாவின் பாதுகாப்பு பொறுப்பாளரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான ஜோயோங்காங் ஒலிம்பிக் ஜோதியை வரவேற்றார்.
அங்கிருந்து ஒலிம்பிக் தீபம் ஊர்வலமாக தியனன்மென் சதுக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஒலிம்பிக் ஜோதிக்கு சிறப்பு வரவேற்பளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் ஒலிம்பிக் தீபம் சீனா முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. முதல் கட்டமாக இன்று ஒலிம்பிக் ஜோதி அல்மாட்டிக்கு செல்கிறது.
சீனாவிடமிருந்து சுதந்திரம் கோரி திபெத்தியர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக ஒலிம்பிக் ஜோதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க சீனா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் எதென்ஸ் நகரில் ஒலிம்பிக் ஜோதியை ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு முன்பாக சீன எதிர்ப்பாளர்கள் `திபெத்தைப் பாதுகாப்போம்' என்று கோஷம் எழுப்பினார்கள். அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.