அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்
காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும், நானும் 15 ஆண்டுகள் ஏககாலத்தில் பாராளுமன்றத்தில் இருந்தோம். இக்காலப்பகுதிக்குள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள், சம்பிரதாயங்களை அவர் நன்கு பயின்றார். மிகவும் தீவிரமாகவும், தர்க்கரீதியாகவும் எதிர்த் தரப்பினரின் வாதங்களை முறியடிப்பதில் சமர்த்தர் அவர்.
பாராளுமன்ற சம்பிரதாயங்கள் குறித்து சர்வதேச புகழ்பெற்ற ஏர்ஸ்கின் மேயின் நூலை வாசித்து எனது வாதத்தை நான் முன்வைக்கும்போதெல்லாம், எதிரணியில் அமர்ந்திருக்கும் ஜெயராஜ் எந்தவிதக் குறிப்புகளையும் பாராது எனது வாதங்களை முறியடிக்கும் திறமை எதிர்க்கட்சியில் அவரிடம் மட்டும் தான் இருந்ததை நான் அவதானித்தேன்.
அடிக்கடி நாம் சொற்கணைகளை வீசி முட்டி மோதிக்கொள்வோம். ஜெயராஜ் கூரிய சொல்லம்புகளை எம்மைநோக்கி வீசுவார். எனினும், அவரது முகபாவனையில் எந்தவித கோப வெளிப்பாடுகளும் தோன்றாது. புன்முறுவல் பூத்தவாறே கடுஞ்சொற்களையும் கவனமாக என்மீது வீசி எறிவார். இது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருக்க வேண்டிய ஒரு நல்ல பண்பு. இயல்பாகவே அங்க அசைவுகளால் (Body Language) முகபாவனையால், வெறுப்பு, கோப தாபங்களை வெளிக்காட்டாத பண்பைக் கொண்டிருந்தார் ஜெயராஜ். நான் சபைக்குள் அவரோடு முட்டிமோதிவிட்டு வெளியே வரும்போது என்னைத் தட்டிக்கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கத்தை பண்பை அவர் நிறையவே கொண்டிருந்தார்.
அன்று, அப்போதைய சபாநாயகர் ஜோஸப் மைக்கல் பெரேரா பாராளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான தெரிவுக்குழுவொன்றை எனது தலைமையில் நியமித்தார். அக்குழுவின் சிபாரிசுகளுக்கிணங்கவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கணினி வசதிகள் ஏனைய தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கவும், இணையத்தள வசதிகள் வழங்கவும் மற்றுமுண்டான நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்தி ஏனையோருக்கும் முன்மாதிரி காட்டியவர் காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே.
அவர் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் பாராளுமன்றத்துக்கு நேரகாலத்துடனேயே வந்து, பாராளுமன்ற நூலகத்தில் மிக நீண்ட நேரம் இருப்பார். அங்கு தான் கற்றுக்கொண்ட கணினிப் பட்டை தீட்டும் முயற்சியில் ஈடுபடுவார். மிகக்குறுகிய காலத்துள் ஏனைய சக உறுப்பினர்களுக்கும் கணினி பற்றி அவர்களது சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் ஒரு தேர்ச்சி பெற்ற கணினி ஆசானாகவும் அவர் மாறினார். நூலகத்திற்குச் சென்று - நான் எதிரணியில் இருந்தாலும் - அவர் மூலம் பல தகவல்களை கணினியிலிருந்து பெற்றுக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். அவர் அமைச்சரான பின்னரும்கூட இணையத்தளத்தில் ஊடுருவி தகவல்களைப் பெற்றுவந்து பாராளுமன்றத்தில் பேசுவார். அவரைச் சபையில் சாடுவதற்கு அவர் கணினி மூலம் பெற்றுத்தந்த விஷயங்கள் எனக்கு மிகவும் பிரயோசனமாகவிருக்கும். "நான் தந்த தகவல்களை சரியாகப் பாவித்தீர் அஸ்வர்" என்று லொபியில் சந்திக்கும்போது என்னை வாழ்த்துவார்.
ஜெயராஜ் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. பாராளுமன்ற ஜனநாயகத்தை மதித்து நடந்தவர் அவர். பாராளுமன்றத்தில் அநேக சந்தர்ப்பங்களில் கோரம் இல்லாத கோலம் ஏற்படும். அப்போதெல்லாம் உறுப்பினர்களை கட்டளையிட்டு அழைக்க வேண்டிய நிலை சபாநாயகருக்கு ஏற்படும். ஆனாலும், ஒரு பக்கம் நானும் மறுபக்கம் ஜெயராஜும் எப்போதும் சபையில் அமர்ந்திருப்போம்.
ஜெயராஜ் ஒரு தமிழர். அவரோடு பேசுகையில் தமிழின் இனிமையை நான் என்றும் ரசிப்பதுண்டு. அதற்காகவே அவரோடு தமிழிலேயே பேசிவந்தேன். தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டவர். கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு பிரதேச வாழ் முஸ்லிம்களின் நன்மதிப்பையும் நிறையப் பெற்றிருந்தார் அவர்.
நீர்கொழும்பு நகர சபையின் சிரேஷ்ட உறுப்பினரான நஸ்மியாரின் தந்தை பலகத்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். தாஸிம் தனது மாவட்ட எம்.பி.யின் கொலைச் செய்தி கேட்டவுடனேயே முதலில் என்னோடு தான் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவர் என்னோடு பேசும்போதே துக்கம் தாழமுடியாமல் அவரது நா தட்டுத் தடுமாறியது. விம்மி விம்மி அழுகை வந்துகொண்டிருந்தது. கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் ஜெயராஜுடன் கொண்டிருந்த பாசத்தை தாஸிம் காக்காவின் பேச்சு நன்கு புலப்படுத்தியது.
இறுதியாக கடந்த 3 ஆம் திகதி திருகோணமலைக் கச்சேரியில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு அவரது தலைமையிலேயே அமைச்சர்கள் றிஷாத் பதியுதீன், நஜீப் அப்துல் மஜீத், மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா மற்றும் நான் உட்பட பலரும் அங்கு சென்றிருந்தோம். அன்று அவர் மிகவும் உற்சாகமாக தமிழ் முஸ்லிம் மக்களோடு உறவாடினார். குறிப்பாக, ஐ.ம.சு.மு. யின் முதன்மை வேட்பாளர் மௌலவி எஸ்.எம்.எம். ஹஸன் (அஸ்ஹரி) உடன் மிகவும் அந்நியோன்யமாக உரையாடினார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் ஹஸன் மௌலவியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான ஊர்வலத்திலும் அவர் ஆவலுடன் கலந்துகொள்ள முற்படவே, அதனை அவதானித்த பாதுகாப்பு பிரிவினர் அவரை அவ்விடத்திலிருந்து பலவந்தமாக அழைத்துச் சென்று, அவரது வாகனத்தில் ஏற்றி, அங்கிருந்து அவரை வெளியேற்றிவிட்டனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பொலிஸாரினால் பலவந்தமாகவே அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் கிழக்கு மாகாண ஆளுநரின் வாசஸ்தலத்தில் ஏற்பாடாகியிருந்த மதியபோசனத்தை உண்டார். நானும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவும் மதியபோசனத்துக்காக கிழக்கு மாகாண ஆளுநரின் வாசஸ்தலம் ஏகியபோது அங்கே ஏற்கனவே ஜெயராஜ் உணவு உண்டு முடித்துவிட்டு, தயிரும், பாணியும் சுவைத்துக்கொண்டிருப்பதைக் கண்டோம்.
"இதென்ன எங்களுக்கு முன்பே சாப்பிட்டுவிட்டீர்களே?" என்று நான் கேட்டேன். "தயிரும், பாணியும் சுவையானது. நீங்கள் வரும்வரை நான் பொறுத்துக்கொண்டிருக்க முடியுமா, என்ன?" என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கணை தொடுக்கும் பாணியிலேயே கேட்டு என்னை அவ்வேளையிலும் மடக்கிவிட்டார்.
பின்னர், ஜெயராஜ் என்னைப் பார்த்து, "அஸ்வர்! governorஐ இங்கே விட்டுவிட்டுப் போயிடாதீங்க. இப்படியான இடங்களில் அவர் மூன்று, ஏழு நாட்கள் எனத் தங்கிவிடுவார். இங்கே அவரை கன நாட்கள் தங்கவைக்க வேண்டாம். அவரை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்" என ஜோக் அடித்தார். இதுவே அவர் எம்மோடு பேசிய இறுதி வார்த்தைகள்.
ஜெயராஜின் அகால மரணச் செய்தி கேட்டு நானும் ஆளுநரும் துடித்துப்போனோம். நேராக நாங்கள் கம்பஹா வைத்தியசாலைக்குச் சென்றோம். அங்கிருந்து மலர்ச்சாலைக்கும், பின்னர் கொழும்பு -7 இல் லோங்டன் பிளேஸிலுள்ள அவரது வாசஸ்தலத்துக்கும் வந்தோம். மக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் மலர் வளையங்கள் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது. நான் சற்று விலகிச் சென்று ஜெயராஜ் தினசரி வேலை செய்யும் அவரது அறையினைப் பார்த்தேன்.
என்ன ஆச்சரியம்! அவரது மேசைமீது என் பார்வை தொட்டபோது என் கண்களில் பட்டது ஒரு நூல். `இஸ்லாமிய நற்சிந்தனை' என்பது அந்நூலின் பெயர். சென்னையில் பிரசுரிக்கப்பட்டது. அந்த நூலின் ஆசிரியர், ஒன்று, இலங்கை வந்தபோது அதனை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும்; அல்லது சென்னையிலிருந்து தபாலில் வந்திருக்க வேண்டும். முஸ்லிம்களை மதித்த ஓர் அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார் என்பதற்கு இந்நூலே நல்லதொரு எடுத்துக்காட்டு என என்னுள்ளம் சொன்னது.
முஸ்லிம்களின் பிரச்சினைகள் மீது மிகுந்த கரிசணை காட்டிவந்தார் அவர். 16 ஆண்டுகளாக வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டுத் தூதுக்குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடம் முறையிட்டதைத் தொடர்ந்து இந்நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார். அதன் பிரகாரம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படும்போது அதற்கு ஆதரவளிக்குமாறு ஜெயராஜிடம் நான் வேண்டினேன். அதன் பிரகாரம் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டபோது அமைச்சர் றிஷாத்துடன் இணைந்து அந்த முயற்சியில் எமக்குப் பேருதவி வழங்கினார் ஜெயராஜ். எனவே, புதிய நியமனம் பெறுகின்ற ஒவ்வொரு மௌலவியும் அவருக்குக் கடமைப்பட்டவராவார்.
இதேபோன்று, அன்று அவர் விமான சேவைகள் அமைச்சராக இருந்தபோது விமான நிலையத்துக்கு வந்து செல்லும் முஸ்லிம் பயணிகளுக்காக விமான நிலையத்தில் தொழுகை அறையொன்றை இவரே ஒதுக்கித் தந்தார். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் விமான நிலையங்களிலுள்ளதுபோன்று இவ்வசதியை ஏற்படுத்த நாம் ஆட்சியிலிருக்கும்போது எத்தனையோ முறைகள் முயற்சித்தும் முடியாமற் போன ஒரு கைங்கரியத்தை முஸ்லிம்களின் மீது அபிமானம்கொண்டிருந்த ஜெயராஜ் நிறைவேற்றித் தந்தார்.
சென்றவருடம் ஜனாதிபதியின் தூதுக்குழுவில் அங்கம்பெற்று ஐ.நா. சபைக்குச் சென்றபோது ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் வந்திருந்தார். நாம் தங்கியிருந்த ஹோட்டல் மாடியிலேயே அவருக்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசியலின் பல கோணங்களையிட்டு காலையும், மாலையும் நாம் அலசுவதை தினசரி வேலையாகக் கொண்டோம்.
"ஐ.தே.க.வில் 49 ஆண்டுகள் அளப்பெரிய சேவைசெய்த நீங்கள் - பாராளுமன்றத்தில் மறக்க முடியாத அபாரத் திறமையைக் கொண்ட நீங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்திருப்பதையிட்டு நாங்கள் பெருமகிழ்ச்சியடைகின்றோம்" என்று வாய்விட்டே சொல்லிவிட்டார்.
"உங்களைப்போன்ற ஒருவர் பாராளுமன்றத்தில் இப்போது எனக்குத் துணையாக இருந்திருக்க வேண்டும்...." என்று சொன்னார் எனது பாராளுமன்றச் செயற்பாடுகளை நன்கு அவதானித்து வந்த அரசாங்கத் தரப்புக் கொறடாவான ஜெயராஜ்.
பாராளுமன்றம் கண்ட ஓர் இமயம் சரிந்துவிட்டது. பாராளுமன்றத்திலிருந்த ஆலவிருட்சம் சாய்ந்துவிட்டது.
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஒரு பாராளுமன்ற ஜாம்பவான். இச்சரிவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது யாரோ?
ஜனாதிபதியின் ஆலோசகர் ஊடக ஆலாட்சி அதிகாரி