Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உணவுப்பொருள் விலை அதிகரிப்பு
[10 - April - 2008] [Font Size - A - A - A]
உணவுப்பொருட்களின் விலைகள் நாள்தோறும் அதிகரித்து செல்வது இலங்கையில் வழமையான நிகழ்வோ என்று எண்ணத்தோன்றுகிறது. விடிந்தால் ஏதோவொரு பண்டத்தின் விலை அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது. இந்த மோசமான நிலைமையால் இங்கு மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் அமைதியீனமும் அரசியல் ஸ்திரமின்மையும் ஏற்படும் அபாயமிருப்பதாக ஐ.நா. எச்சரித்திருக்கிறது.

உலகின் பல பாகங்களிலும் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உத்தியோகபூர்வ அறிக்கைகள் இவ்விதமாக, அதாவது பொருளாதாரம் செழிப்படைந்து வருவதாக அவ்வப்போது வெளிவருகின்றபோதிலும் நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பால் படும் அவதிகளை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதனை நேரில் அனுபவிக்கும் சகலருமே இந்த மோசமான நிலைமையை நன்கு அறிவார்கள்.

உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் உணவுப் பொருட்களின் விலைகள் வறிய நாடுகளில் எதிர்ப்பு பேரணிகள், கலவரங்களை தூண்டி விடுமென கடந்த செவ்வாயன்று டுபாயில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐ.நா.வின் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளரும் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகமுமான சேர் ஜோன் ஹோல்ம்ஸ் எச்சரித்திருக்கின்றார்.

புவி வெப்பமடையும் பிரச்சினையுடன் உணவுப்பொருள் தட்டுப்பாடு, எரிபொருள் விலை அதிகரிப்பு என்பன மோசமான பாதிப்புகளை தோற்றுவித்திருப்பதாகவும் சராசரியாக 40 சதவீதத்துக்கு பொருட்களின் விலைகள் உலகளாவிய ரீதியில் அதிகரித்திருப்பதாகவும் சேர் ஹோல்ம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அவர் ஒரு முக்கியமான விடயத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது, உணவு நெருக்கடி தொடர்பாக சர்வதேசம் அதிகளவில் அலட்டிக்கொள்ளாத நிலைமையே தென்படுவதாகவும் இந்தப் பாரிய பிரச்சினை குறித்து குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது அதிகரித்துச் செல்லும் தன்மையை நோக்கினால் மேலும் உயர்வடைந்து செல்வதற்கான அறிகுறியே தென்படுவதாகவும் இது மோசமான விளைவை ஏற்படுத்துமெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. முன்னெடுத்து வருகின்றது. அண்மைக்காலமாக எகிப்து, ஹெய்ட்டி, ஐவரிகோஸ்ட், கெமரூன், மொசாம்பிக், செனகல், உஸ்பெகிஸ்தான், யேமன், பொலிவியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா, சீனா, வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளும் உள்நாட்டு நுகர்வுத் தேவை கருதி அரிசி ஏற்றுமதியை மட்டுப்படுத்தியுள்ளன.

`பட்டினியின் புதிய முகம்' தொடர்பாக உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் ஜொசெற்றி சீரன் கடந்தமாதம் எச்சரிக்கை விடுத்திருந்தார். முன்னர் ஒருபோதுமில்லாத அளவுக்கு நகரப் புறங்களில் வாழ்வோர் பட்டினியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் உணவுப் பொருட்களை விற்பனை நிலையங்களில் பார்க்க முடியுமே தவிர அவற்றை கொள்வனவு செய்யும் சக்தி மக்களிடம் இல்லாத நிலையே ஏற்படப்போகின்றது என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை சர்வதேசத்தின் ஒரு உறுப்பினராக இலங்கை இல்லையென்ற ரீதியிலே அரசியல் தலைமைத்துவங்கள் நிர்வாகத்தை மேற்கொள்வதாக தென்படுகின்றது.

வாழ்க்கைச்செலவு அதிகரித்திருக்கின்ற போதும் இலங்கையின் வறுமை நிலையானது 2002 இலும் பார்க்க 2007 இல் 33 சதவீதமாக குறைந்திருப்பதாக மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதுடன் இலங்கையின் பொருளாதாரத்துக்கு இருபெரும் சவால்களாக இருப்பது பயங்கரவாதமும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை தோற்றுவிப்பதுமே காணப்படுவதாகவும் இவற்றை முறியடித்தால் பொருளாதார வளர்ச்சி மேம்படுமெனவும் கூறியுள்ளார்.

ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவே பொருளாதாரத்தை நிர்வகிக்கும் மத்தியவங்கி போன்றவை செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதும் பின்னர் எதிரணி ஆட்சிபீடம் ஏறும் போது இதே நடவடிக்கைகளை தொடர்வதும் இலங்கை போன்ற நாடுகளில் வழமையான விடயங்களாகிவிட்டன.

நாட்டின் சனத்தொகையில் மிகச் சிறிதளவு வீதத்தினராக இருக்கும் செல்வந்தர்கள் இந்த உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பாலோ வாழ்க்கைச் செலவு உயர்வாலோ பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் இது தொடர்பாக அலட்டிக்கொள்வதுமில்லை.

ஆனால், பொருளாதார ரீதியில் நலிந்த வர்க்கத்தினரே விலைவாசி உயர்வால் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உலகின் பாதுகாப்புக்கே உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ள தற்போதைய நிலைமையிலாவது அரசாங்கம் இப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com