* தேர்தல் வன்முறைகளில் 7 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சுட்டுக்கொலை
காத்மண்டு: நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சபைக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவாளர்கள் 7 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இச் சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக டாங்க் மாவட்ட மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தேர்தலில் எதிரணிகளில் போட்டியிடவுள்ள மாவோயிஸ்ட்டுகளுக்கும் உள்ளூர் வேட்பாளரின் இளைஞரணி ஒன்றுக்குமிடையிலான மோதலைத் தொடர்ந்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகளில் மிக மோசமானதாகக் கருதப்படும் இச்சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆயுதம் தாங்கிய பொலிஸாரினாலும் துணை இராணுவக் குழுவொன்றாலுமே மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் உள்ளூர் வேட்பாளரின் ஆதரவாளர்கள் 40 பேரை தமது கட்சியின் ஆதரவாளர்கள் தடுத்து வைத்தமையைத் தொடர்ந்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக மாவோயிஸ்ட் தலைவர் தெரிவிக்கும் அதேவேளை, காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை தாக்க முயன்ற மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதுடன், நாடு முழுவதும் சுமார் 10,000 பொலிஸ் அதிகாரிகள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரொருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1999 இற்கு பின்னர் 2006 இல் நேபாள அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தை மாவோயிஸ்ட்டுக்கள் கைவிட்டதைத் தொடர்ந்து நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும்.
இத்தேர்தல் அரசியலமைப்பை மாற்றி எழுதுவதற்கான சபைக்கும் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைப்பொன்றை ஏற்படுத்துவதற்காகவும் நடத்தப்படுகிறது.
2005 இல் மன்னர் கயனேந்திரா அதிகாரத்தை கைப்பற்றிய போதும் ஜனநாயகத்திற்கு சார்பான ஆர்ப்பாட்டங்களினால் அடுத்த வருடமே தனது அதிகாரம் முழுவதையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்களில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டரும் ஒருவராவார்.
26.4 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நேபாளத்தில் இன்றைய தேர்தலில் 17.6 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.