* ஆய்வொன்றில் தகவல்
வெலிங்டன்: நியூஸிலாந்தின் எதிர்காலத்திற்கு ஆசிய மக்கள் அவசியமெனக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டின் ஆய்வறிக்கையொன்று ஆசிய குடியேற்றவாசிகள் நியூசிலாந்தின் தேசிய அடையாளத்தையே மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வறிக்கை ஒக்லண்ட் பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் சூழலியல் விஞ்ஞானம் போன்ற துறைகளின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி வோர்ட்கோ பிறிய்செனால் வால் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு முக்கிய வளங்களாக சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளின் குடியேற்றவாசிகள் காணப்படுகின்ற போதும் ஆங்கிலமொழி தகுதி கோரப்படுவதன் காரணமாக இந்நாடுகளின் குடியேற்றவாசிகள் தொகை குறைவடைந்துள்ளதாக இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நடைமுறையிலுள்ள ஆங்கிலமொழித் திட்டத்தின் மூலம் இந்நாடுகளிலிருந்து நியூஸிலாந்தில் குடியேறுவோர் தொகை அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவ் ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தின் பணிப்பாளர் அன்ட்ரூ பட்செர் நியூஸிலாந்தின் எதிர்காலத்திற்கு ஆசியாவும் ஆசியர்களும் முக்கியமென்பதை இவ்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், ஒக்லண்ட் பெறும் ஒவ்வொரு கௌரவத்திலும் ஆசிய சமூகத்தின் செல்வாக்கு இருக்குமெனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிய சனத்தொகையின் அதிகரிப்பு நியூஸிலாந்தின் தேசிய அடையாளத்தையே மாற்றுமெனத் தெரிவித்துள்ள இவ் அறிக்கை, நியூஸிலாந்தின் குடிமகன் என்பதற்கான வரையறை பல இனங்களையும் பல நிறங்களையும் கொண்டதாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.