* ஈராக்கிலுள்ள அமெ.இராணுவத் தளபதி
வாஷிங்டன் : ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை விலகிக் கொள்ளும் திட்டத்தினை ஜூலைக்கு பின்னர் இடைநிறுத்த வேண்டுமென ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ தளபதி டேவிட் பெட்ரெயஸ் பரிந்துரை செய்துள்ளார்.
ஈராக்கில் துருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதிலிருந்து குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பெட்ரெயஸ் ஆனால் முன்னேற்றங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அண்மையில் பஸ்ரா நகர் மீது நடத்தப்பட்ட நடவடிக்கைகள் போதியளவில் திட்டமிடப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரெயஸ்ஸும் ஈராக்கிற்கான அமெரிக்கத் தூதுவர் றியான் குறொக்கரும் படையினரின் எண்ணிக்கையை ஈராக்கில் அதிகரித்தமையைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து காங்கிரஸுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் எனக் கருதப்படும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோன் மக்கெய்ன் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் முன்னிலையிலும் இவர்கள் தமது விளக்கங்களை அளித்துள்ளனர்.
ஈராக்கின் தற்போதைய நிலைவரத்திற்கு மக்கெய்ன் ஆதரவு வழங்கும் அதேவேளை ஒபாமாவும் ஹிலாரியும் படைகளை வாபஸ் பெறுவதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னிலையில் தனது அறிக்கையை சமர்ப்பித்த பெட்ரெயஸ்;
கடந்த செப்டெம்பரில் ஈராக் நிலைவரம் தொடர்பான கடைசி அறிக்கையை சமர்ப்பித்த போது இருந்ததை விட தற்போது அங்கு பாதுகாப்பு முன்னேற்றமடைந்துள்ளது. படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையான முன்னேற்றம் மிகவும் பலவீனமாக உள்ளது. ஜூலையில் 20000 படையினரை வாபஸ் பெறும் திட்டம் தொடரப்படும் அதேவேளை அதன் பின்னர் படைகளை பலப்படுத்துவதற்கான 45 நாள் கால எல்லையைக் கொண்ட மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்வருட முடிவில் ஈராக்கில் இருக்கப் போகும் துருப்புக்களின் எண்ணிக்கை தொடர்பில் அவர் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. தற்போது அங்கு 160,000 துருப்புக்கள் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு தனது விளக்கத்தையளித்த குறொக்கர்;
ஈராக்கின் முன்னேற்றம் அடிக்கடி சில ஏமாற்றங்களை தருகின்றது. ஆனால் அமெரிக்க ஈராக்கிய அரசுகளின் தமது நீண்டகால உறவு தொடர்பில் பேச்சுக்களை நடத்துகின்றன. இதற்குள் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் தங்கியிருக்கும் விவகாரமும் உள்ளடங்குகிறது. ஆனால் இப் பேச்சுகளுக்கான உடன்படிக்கை அமெரிக்கப் படைகள் ஈராக்கில் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதை உறுதிசெய்யாதென தெரிவித்துள்ளார்.
படைகளை வாபஸ்பெறும் திட்டத்தை இடைநிறுத்துவதற்கு மக்கெய்ன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை ஹிலாரியும் ஒபாமாவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் படைகளை வாபஸ் பெறுவதற்கான கால அட்டவணையை தயாரிப்பதற்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.