*ஆட்பதிவு திணைக்களம் தெரிவிப்பு
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கம்பஹா வெலிவேரியா பகுதிக்கு செல்வது குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லையென அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவு (எம்.எஸ்.டி) இயக்குநரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கொலை தொடர்பாக நடைபெறும் விசாரணையின் பொருட்டு பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்திலேயே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நந்தன முனசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் வலிவேரியா பகுதிக்கான விஜயத்தில் அமைச்சரவை பாதுகாப்புப்பிரிவு எந்தவித ஏற்பாடுகளையும் செய்யவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதியின் பாதுகாப்பில் விசேட அதிரடிப் படையினரே ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே நேரம் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை போலியானதெனத் தெரிய வந்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாழைச் சேனையை சேர்ந்த அமீன் என்பவரது அடையாள அட்டையே அதுவென முதலில் தெரிவிக்கப்பட்ட போதும், அந்த இலக்கத்தில் தாங்கள் அடையாளஅட்டை எதனையும் வழங்கவில்லையென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.