அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலையை அடுத்து கடந்த திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி தலைமையில் விஷேட பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினதும் (சி.ஐ.டி.) பயங்கரவாத தடுப்பு பிரிவு (ரி.ஐ.டி.) பொறுப்பதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மிக நீண்ட நேரம் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
கம்பஹா வலிவேரியா பகுதிக்கு அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே சென்றபோது அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
அத்துடன், இது தொடர்பாக உடனடியாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சகல புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர்களுக்கும் ஜனாதிபதி இங்கு அவசர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அரச தலைவர்களின் பாதுகாப்பு விடயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மிக முக்கியஸ்தர்களின் நடமாட்டங்கள் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
இதேநேரம், அமைச்சரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடே அவர் கொல்லப்படுவதற்குக் காரணமாகிவிட்டதாகக் கூறப்படுவதை இங்கு பொலிஸார் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.