கடந்த செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற மாத்தளை மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தின் போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலைக்கு கண்டன தீர்மானமொன்றுடன் அனுதாப பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.
பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய நகரபிதா முகமது ஹில்மி கரீம். "மும் மொழிகளிலும் பரிச்சயம் பெற்றிருந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இன ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டி வளர்ப்பதில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார்.
அத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்தார்.
அவரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமல்லாது சமாதான விரும்பிகள் அனைவருக்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" என்றார்.
நகரசபை உறுப்பினர்கள் பலரும் இப்பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இப்பிரேரணையை அவரது குடும்பத்திற்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.