தேசிய அடையாள அட்டை இருந்தும் சந்தேகத்தின் பேரில் தொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்களை கைது செய்திருப்பது முற்றிலும் மனிரிவுரிமை மீறலாகும். இது பெருந்தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தி இன முரண்பாட்டை முன்னெடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். ஆகவே இத் தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய உத்தர விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி. அய்யாத்துரை ஜனாதிபதிக்கு அவசரமாக பெக்ஸ் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்வதற்கு பொலிஸாருக்கு உரிமையுண்டு,ஆனால் தேசிய அடையாள அட்டையை காட்டி தாங்கள் தொழிலுக்குப் போகிறவர்கள் என்று சொல்லியும் கைது செய்திருப்பது ஒரு மனிதாபிமான மற்ற மனிதவுரிமை மீறலாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிலர் திட்டமிட்டு அச்சுறுத்தி எடுக்கும் இனவாத நடவடிக்கைக்கு இத்தகைய நடவடிக்கைகள் ஆதரவு காட்டுவதாக அமைந்துள்ளதுடன் இனவாத அடக்குமுறையை முன்னெடுக்கும் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும்.
ஆகவே , ஜனாதிபதி அப்புத்தளை, தங்மகலை, விகாரகெல தோட்டங்களைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட பதினெட்டு தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.