* ஐ.தே.க.எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன குற்றச்சாட்டு
இராணுவ ரீதியில் முக்கியமற்ற மடுப்பிரதேசத்தை கைப்பற்ற முக்கியத்துவம் வழங்கப்படுவது குறித்து இராணுவத்தினர் கேள்வியெழுப்பியுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க.எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன போரில் கொல்லப்படும் இப்படையினர் பற்றி பிரதமர் வெளியிடும் தரவுகளை தம்மால் ஏற்கமுடியாதெனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அவசரகால சட்டப்பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
கடந்த மாதம் 93 முப்படையினரே கொல்லப்பட்டதாக பிரதமர் கூறினாலும் 121 இராணுவத்தினர் கடந்தமாதம் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் பெயர், விலாசங்கள் எம்மிடமுள்ளன. எனவே இச்சபையில் பிரதமர் தரும் தரவுகளை எம்மால் ஏற்கமுடியாது.
கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் ஒருவர் மலர்வளையத்தை இச்சபைக்கு கொண்டு வந்த பின்னரே 6 எம்.பி.க்கள் பரிதாபகரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். மலர் வளையம் சபைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்தான் இந்நாடு சாபக்கேட்டினால் பீடிக்கப்பட்டது.
மகேஸ்வரன் எம்.பி.யை யார் கொலை செய்தார்கள் என்பது தெரியும். ஆனால் அரசாங்கம் இதனை மறுத்து பொலிஸ்மா அதிபர் புலிகளே மகேஸ்வரனை படுகொலை செய்தனர் என்றார்.
மடு ஆலயம் பழமை வாய்ந்தது. இப்பிரதேசம் இராணுவ ரீதியில் முக்கிய மற்றது. எனினும் இத்தேவாலயத்தை கைப்பற்ற ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வி இராணுவத்தினரிடையே எழுந்துள்ளது. அரசியல் இலாபத்திற்கே மடுமீதான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இராணுவத்திற்கு ஒரு பக்கம் ஆட்சேர்த்தாலும் மறுபக்கம் பலர் தப்பியோடியுள்ளனர். தப்பியோடவும் காத்திருக்கின்றனர்.
இராணுவத்திற்கு தவறான உத்தரவுகள் வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் திறமை மழுங்கடிக்கப்படுகிறது. அத்துடன் உயிரிழப்புகளும் பெருகியுள்ளது. நாம் கூறுவது பிழையென்றால் இராணுவ தளபதிகள் இதுபற்றி எமக்கு விளக்கமளிக்கலாம்.
பிள்ளையானின் தேவைக்காக கிழக்கில் விசேட அதிரடிப்படை முகாம்கள் அகற்ப்பட்டுள்ளது. மிகவிரைவில் பிள்ளையான் புல்லுரிவியாக மாறுவார். இதனை பொறுத்திருந்து பாருங்கள். அவர் கிழக்கில் பாரிய இராணுவ முகாம்களை அமைத்து வருகிறார். இது பாரிய விளைவுகளை தோற்றுவிக்கும்.
இச்சபையில் இருக்க வேண்டியவர் அமைச்சர் ஜெயராஜ். அவரின் வெற்றிடத்தை ஆளும்தரப்பு எவரினாலும் ஒருபோதும் நிரப்பமுடியாது.
ஜெயராஜின் படுகொலையின் பின்னர் மதவாச்சி பாதையை மூடினாலும் ஒருபலனும் கிட்டவில்லை. அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாட்டிலுள்ள குறைபாட்டையே இது வெளிக்காட்டுகிறது.