* ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பொலிஸார் சாட்சியம்
யோ.நிமல்ராஜ்
விசேட அதிரடிப் படையினரின் ஆயுதங்களை நான் பார்த்தபோது அவற்றில் ரவைக்கூடுகள் களையப்பட்டிருந்தனவென திருகோணமலையில் ஐந்து இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக சாட்சியம் வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களின் மரணம் குறித்த விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கும் போதே திருகோணமலை சீனன் குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது சாட்சியத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
1978 ஆம் ஆண்டு பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையில் இணைந்த நான், உதவிப் பொலிஸ் அத்தியட்சராக 1998 மார்ச் 25 ஆம் திகதி பதவி உயர்த்தப்பட்டேன்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி 2004 ஆம் ஆண்டு நவம்பர் திருகோணமலை சீனன்குடா பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டேன்.
பின்னர் அங்கிருந்து 2005 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். அவ்வேளை அப்புகாமி என்பவர் அப்பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்தார். அங்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் நான் கடமையாற்றினேன்.
2005 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து 2006 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதி வரை அப்பிரிவிலேயே நான் கடமை புரிந்தேன்.
ஆனால், 2006 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதியன்று நான் லீவில் நின்றேன். அத்துடன், அக்காலப்பகுதியில் எனது சொந்தத் தேவைகளுக்காக குளியாப்பிட்டியவில் உள்ள எனது வீட்டிலேயே தங்கியிருந்தேன்.
2006 ஜனவரி மூன்றாம் திகதி வரைதான் நான் லீவைப் பெற்றிருந்தேன். அத்துடன், நான்காம் திகதி பகல் 12 மணிக்குத்தான் நான் கடமைக்குத் திரும்பினேன்.
இந்நிலையில், இச்சாட்சியை குறுக்கு விசாரணை செய்த சட்டத்தரணி ரஞ்சித் அபயசூரிய, மூன்றாம் திகதியுடன் லீவு முடிவடைந்தால் நான்காம் திகதி பகல் 12 மணிக்கு கடமைக்குத் திரும்பியுள்ளமை எவ்வாறு சாத்தியம் என்றும் அன்றைய தினம் காலையிலேயே கடமையைப் பொறுப்பேற்றிருக்க வேண்டுமென்றும் கூறியபோது சாட்சி மேலும் தெரிவிக்கையில்;
நான்காம் திகதியே நான் அலுவலகம் திரும்பினேன். அதனால் உரிய நேரத்தில் கடமையைப் பொறுப்பேற்க முடியவில்லை.
அன்றையதினம் இரவுதான் எனக்கு இச்சம்பவம் தொடர்பாகத் தெரியும். அதுவரை எனக்குத் தெரியாது.
அன்றைய தினம் இரவு 9.30 மணியளவில் கபில ஜெயசேகர என்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எமது உத்தியோக பூர்வ தங்குமிடத்துக்கு வருகை தந்து இச்சம்பவம் தொடர்பாக எனக்கு தெரிவித்ததுடன், விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டவர்களிடம் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதுவரை எனக்கு இச்சம்பவம் தொடர்பாகத் தெரியாது. அத்துடன், அதுவரை இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் செய்வதற்கும் எனக்கு எதுவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
கபில ஜெயசேகர இவ் உத்தரவை அத்தங்குமிடத்தில் இருந்த எட்டு தொடக்கம் பத்து வரையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமாக பொதுவாகவே கூறினார்.
ஆனால், அவர் எதுவிதமான முன்னறிவித்தல் எதுவுமின்றியே அங்கு வந்தார். அவருடன் இன்னும் சிலர் இருந்தனர்.
அவருடன் வந்த நான்கு விசேட அதிரடிப்படையினரிடம் வாக்குமூலம் பெறும்படியாக கபில ஜெயசேகரவின் உத்தரவின் பேரில் நான் அவர்களிடம் வாக்கு மூலம் எடுத்து முடித்தபோது நேரம் நள்ளிரவு 12.05.
அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களை கபில ஜெயசேகர பரிசோதித்துப் பார்த்தார். அப்போது அவ் ஆயுதங்களில் ரவைக் கூடுகள் இருக்கவில்லை.
ரி56 ரகத் துப்பாக்கிகள் எட்டும் அதன் தோட்டாக்கள் நூற்று இருபதும் எம் 60 ரகத் துப்பாக்கிகள் நான்கும் அதன் தோட்டாக்கள் இருபத்துநான்கும் ஒரு கைத்துப்பாக்கியுமாக மொத்தமாக 13 ஆயுதங்களை நான் பொறுப்பேற்றன்.
ஆனால், நான் அவ் ஆயுதங்கள் எதனையும் பரிசோதித்துப் பார்க்கவில்லை.
இந்நிலையில், குறுக்கு விசாரணை செய்த ஜனாதிபதி சட்டத்தரணி ரஞ்சித் அபயசூரிய, அந்த நால்வரையும் ஏன் அழைத்து வந்ததாக கபில ஜெயசேகர கூறினாரா எனக் கேட்டபோது, இல்லையெனப் பதில் கூறிய சாட்சி மேலும் தெரிவிக்கையில்;
அதுபற்றி கபில ஜெயசேகர எதுவும் கூறவில்லை. ஆனால், இவர்கள்தான் சம்பவம் இடம்பெற்ற பின் அவ் இடத்திற்கு முதலில் சென்றனரென்றே கூறியிருந்தார்.
ஆனால், கபில ஜெயசேகர அவ் ஆயுதங்களை முகர்ந்து பார்த்தார் நான் அவ்வாறு முகர்ந்து பரிசோதிக்கவில்லை.
அந்த விசேட அதிரடிப் படையினர்கள் நால்வரும் பழைய பொலிஸ் நிலையத்திலேயே தங்கியிருந்தனர்.
அவர்கள் ஆயுதம் எடுக்கும் போதோ, அல்லது திரும்பக் கொணர்ந்து வைக்கும் போதோ பதிவு செய்தார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது.
அத்துடன் தமது வெளிச்செல்கை, வருகைப் பதிவுகளையும் உரிய முறைப்படி பேணினார்களா என்பது தொடர்பாகவும் எனக்குத் தெரியாது.
பின்னர் அவ்வாயுதங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக எட்டாம் திகதி கொழும்புக்கு புறப்பட்டுச் சென்று ஒன்பதாம் திகதி ஆய்வுக்கு ஒப்படைத்த பின் பத்தாம் திகதி திரும்பவும் திருகோணமலையை வந்தடைந்தேன்.
ஆனால், ஆய்வுக்கு 26 ஆயுதங்கள் அனுப்பப்பட்டன. அவற்றில் என்னிடமிருந்தவற்றைத்தவிர ஏனைய பதின்மூன்றும் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்தவையெனத் தெரிவித்தார்.