கொசோவோ போன்று தமிழீழம் பிரகடனப்படுத்தப்படும் நாள் விரைவில் உருவாகுமென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி சந்தைப்பகுதி வர்த்தகர்களுக்கான சமகால அரசியல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழன்பன் மேலும் கூறுகையில்;
"வன்னிக் களமுனையில் போரியல் திறன்மிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரை சிங்கள அரசு பயன்படுத்துகின்றது. அப்படையினரோடு தீரமுடன் போராடி பெரும் இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் புதிய போராளிகள் பரிணாம வளர்ச்சியினைப் பெற்றுள்ளனர்.
மடுப் பகுதியினைக் கைப்பற்றுவதற்காக கடந்த வருடம் இராணுவத்தினர் படை நடவடிக்கையை தொடங்கினர். இந்நடவடிக்கை நீண்டதொரு நடவடிக்கையாக தற்போதுள்ளது.
மேலும் மடு மாதா இடம்பெயர்ந்தமையால் இலங்கை அரசிற்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொசோவோ போன்று தமிழீழம் பிகடனப்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
தமிழீழத்தின் வான் தளத்தில் இருந்து ஏனைய நாடுகளுக்கு விமானங்களில் செல்லும் நாளும் தமிழ் மக்களுக்குக் கிட்டும் வாய்ப்பு ஏற்படும்" என்றார்.