அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாதம் நீடிப்பதற்கான பிரேரணை 78 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்கெடுப்பில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி, ஐ.தே.க., ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச தலைமையிலான மாற்றுக் குழு ஆகியன பங்கேற்கவில்லை.
பிரேரணைக்கு ஆதரவாக அரசுடன் ஜே.வி.பி.வாக்களித்தது. எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது.
இதேவேளை, அவசரகால சட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால் அதன் அவசியம் கருதி பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக கித்துல் கொடவுக்கு எதிரான தமது போராட்டத்தை இன்று (நேற்று) மட்டும் நிறுத்தி வைப்பதாக எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
அவசரகாலச்சட்டம் நீடிப்பு தொடர்பான பிரேரணையை நேற்று பிரதமர் சபையில் சமர்ப்பித்து உரையாற்ற தயாரான போதே இவ்வாறு தெரிவித்த ஜோசப் மைக்கல் பெரேரா மேலும் கூறியதாவது;
அரசியமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பதில் செயலாளரின் நியமனத்திற்கெதிராக தொடர்ந்து போராடுவோமென அறிவித்திருந்தோம். ஆனால் இன்று இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் அவசியமான அவசரகாலசட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதால் நாம் எமது போராட்டத்தை இன்று மட்டும் ஒத்திவைக்கிறோம்.
அத்துடன் அவசரகால சட்ட நீடிப்புக்கு எமது ஆதரவைத் தெரிவிப்பதுடன் ஏனைய நாட்களில் எமது போராட்டம் தொடரும்.