*தேர்தல் ஆணையாளருக்கு ஹக்கீம் கடிதம்
கிழக்கு மாகாணத் தேர்தலில் பாதுகாப்பை அதிகரித்து சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலையில், தனது பாதுகாப்பை குறைப்பது எந்தவகையில் நியாயமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளுமாறு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து பேசிய ரவூப் ஹக்கீம், அதனடிப்படையில் அவருக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
கிழக்கு மாகாணத் தேர்தலில் பங்கேற்பதற்காக கடந்த இரண்டாம் திகதி எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துள்ளேன்.
அதன் பின்னர் எனது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்கள் நிறைந்த கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடவடிக்கைகளில் பாதுகாப்பை அதிகரித்து சுதந்திரமான தேர்தலை நடத்தவேண்டிய நிலையில், எனது பாதுகாப்பை குறைப்பது எந்தவகையில் நியாயம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் கட்சியின் தலைவர்கள் அல்லாதோருக்கு உரிய பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை.
கட்சியின் தலைவர் அல்லாதவர்களுக்கே உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைவர் ஒருவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையகம் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.