வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தில் தனிமையில் வாழ்ந்த இளம் யுவதியொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை காலை இவரது வீட்டுக்குச் சென்ற உறவினர்கள், இவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த பொலிஸார், 19 வயதான இந்துமதியின் சடலத்தை எடுத்துச் சென்று வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.
தனிமையாக வாழ்ந்து வந்தவர் என்பது ஆரம்ப விசாரணையின்போது தெரியவந்துள்ளது. சடலம் வவுனியா சவச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் வவுனியா பொலிஸார், மாவட்ட நீதிவான் எம்.இளஞ்செழியனுக்கும் கொலை பற்றிய தகவலை தெரிவித்துள்ளனர்.
சட்ட வைத்திய அதிகாரி ஒருவர், சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இவர் மொட்டையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை பற்றிய பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும் பிரேத பரிசோதனையின் பின்னர்தான் உண்மை நிலை தெரியவருமென பொலிஸார் தெரிவித்தனர்.