* கன்னி உரையில் நௌசாத்
கிழக்கு மாகாண மக்கள் தமது பொறுமையின் எல்லை தாண்டும் மோசமானதொரு நிலையில் உள்ளனர். இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளத் தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய எம்.பியாக நியமனம் பெற்ற என். நௌசாத் தனது கன்னி உரையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவகாரத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த இவர் மேலும் கூறியதாவது;
தற்போது முழுக்கிழக்கு மாகாணமுமே இராணுவமயமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் இராணுவ முகாம்களும் காவலரண்களும் நிரந்தரமாக மாறிவிட்டன. இதனை பார்க்கும் போது கிழக்கு எதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமலுள்ளது.
இங்கு பலர் சிவிலுடைகளில் இராணுவத்தின் கடமைகளை செய்கின்றனர். இவர்கள் யார்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? அரசாங்கம் உடனடியாக கிழக்கிலுள்ள இராணுவமய நிலையை இல்லாது செய்ய வேண்டும்.
அதிகாரத்தை பெறுவதற்காக ஒரு இனக் குழுவினர் மற்ற இனத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது. இப்போது யார் யார் எந்தப் பக்கம்? இது யார் நிலம்? எனப் பிரச்சினைப்படுகிறார்கள். சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அறக் கடமை பெரும்பான்மையினருக்குண்டு. எனவே அவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றைக் காண வேண்டும்.