யாழ்ப்பாணம், குருநகர் கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் இளம் கடற்றொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எனினும் இத்தாக்குதலிலிருந்து பெருமளவு கடற்றொழிலாளர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
நேற்றுக் காலை பத்து மணியளவிலேயே குருநகர் கடல்நீரேரியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழமைபோல் நேற்றும் குருநகர் கடற்பரப்புக்கு பெருமளவு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவ்வேளையில் சில மீன்பிடிப்படகுகள் தவறுதலாக, இராணுவத்தினர் விதித்த கடல் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டன.
இதையடுத்து அரியாலை பகுதியிலிருந்து கடற்பரப்பை நோக்கி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் போதே குருநகரைச் சேர்ந்த இராஜநாயகம் சாந்தரூபன் (22 வயது) என்ற கடற்றொழிலாளி ஷெல் தாக்குதலுக்கிலக்காகி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். ஏனைய மீனவர்கள் தாங்கள் சென்ற படகுகளினுள் வீழ்ந்து படுத்து மயிரிழையில் உயிர் தப்பினர்.
இந்தத் தாக்குதலால் அச்சமடைந்த கடற்றொழிலாளர்கள் அனைவரும், கொல்லப்பட்டவரது சடலத்தையும் எடுத்துக் கொண்டு உடனடியாகக் கரை திரும்பியுள்ளனர்.
சடலம் பின்னர் யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஷெல் தாக்குதல் மற்றும் உயிரிழப்பால் குருநகரில் நேற்று பதற்றம் நிலவியது.