* சபையில் பிரதமர் விக்கிரமநாயக்க
கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முன்னோடியாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே செயற்பட்டதாலேயே புலிகள் அவரை படுகொலை செய்ததாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது;
"பாராளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் புலிகளுக்கெதிராக குரல் எழுப்பிய ஜெயராஜை புலிகளால் கொலைசெய்ய முடிந்தமையையிட்டு நாம் கவலையடைகிறோம்.
ஜெயராஜின் குரலை புலிகள் நிறுத்திவிட்டாலும் அவரின் கருத்தியலான, புலிகளை இந்த மண்ணிலிருந்து முற்றாக ஒழிக்கும் பணியை நாம் நிறுத்தமாட்டோம். கிழக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியை வடக்கு மக்களுக்கு விரைவில் பெற்றுக்கொடுப்போம். நாம் தற்போது கடினமான மலைகளை கடந்து செல்கிறோம். ஜனாதிபதியின் பலம்பொருந்திய உற்சாகத்தினால் நாம் வெற்றியடையும் தூரம் தொலைவில் இல்லை.
வடக்கு யுத்தத்தில் படையினர் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இயற்கை ஒருபுறம் தாக்குகிறது. மறுபுறத்தில் புலிகள் மறைந்திருந்து தாக்குகின்றனர். முருங்கன் வைத்தியசாலை மீது கூட புலிகள் தாக்கியுள்ளனர்.
காட்டிக்கொடுத்தல் வரலாறுகளால் இந்த நாடு துன்பப்பட்டது போதும். இனியும் அந்த வரலாறு தொடரக்கூடாது. இந்தியாவின் தமிழ்நாட்டில் பழநெடுமாறன் என்னும் புலிப்பயங்கரவாதி செயற்பட்டு வருகிறார். அவர் மீது இந்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
கடந்த மாதம் இடம்பெற்ற சம்பவங்களில் 93 படையினரும், 38 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். முப்படைகளை சேர்ந்த 686 பேரும் 21 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். வடக்கில் புலிகள் தோல்வியடைந்து வருவதால் விரக்தியடைந்துள்ளனர். அதனால் தான் தென்பகுதியை தாக்குகின்றனர். ஆனாலும், நாம் புலிகளை முற்றாக ஒழிக்கும் பணியிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்".