* பொத்துவில் சங்கமன்கண்டி பகுதியில் சம்பவம்
பொத்துவில் சங்கமன்கண்டி பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் விசேட அதிரடிப்படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் இரு படையினரும் பொதுமகனொருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பொத்துவில் ரொட்டை பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்திலேயே சங்கமன்கண்டி காட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தப் பகுதிக்கு ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது அங்கு பதுங்கியிருந்த விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இரு இராணுவத்தினரும் , விறகு வெட்டச் சென்ற பொதுமகனொருவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், மற்றொரு இராணுவச் சிப்பாய் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து கொல்லப்பட்ட மூவரது சடலங்களும் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், படுகாயமடைந்த சிப்பாயும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரு அதிரடிப் படையினர் நேற்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.