பொதுமக்களைப் பாதுகாப்பதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இலங்கையில் மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 15 பேர் பலியான சம்பவத்தையடுத்தே ஐ.நா. இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது.
இலங்கையிலுள்ள ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை இது குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
விளையாட்டு நிகழ்வில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளதுடன் கொல்லப்பட்டோரில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயும் பிரபல்யமான விளையாட்டு வீரர்களும் அடங்கியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருக்கிறது.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை வாபஸ் பெறுவதென அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தையடுத்து கடந்த சில மாதங்களாக பல தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஐ.நா. சகல விதமான வன்முறைகளையும் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன் மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மூலமான சமாதான தீர்வைக் காணவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருக்கிறது.