கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹா வலிவேரியா பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இறுதிச் சடங்குகள் இன்று வியாழக்கிழமை மாலை கட்டாணவில் நடைபெறவுள்ளது.
கட்டாண பொது விளையாட்டு மைதானத்தில் பூரண அரச மரியாதைகளுடன் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அதன் பின்னர் பூதவுடல் கட்டாண வெலிஹேன கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இதேவேளை, கட்டாண இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு நீர்கொழும்பு, கட்டாண பகுதி பாடசாலை மாணவர்கள் , அரச, தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் , அரசியல்வாதிகள், சர்வ மதத் தலைவர்கள் உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அருட் சகோதரிகள், அருட் தந்தையர்கள் , மாணவிகள் இரங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
கட்டாண பகுதி எங்கும் அமைச்சரின் புகைப்படத்துடனான அஞ்சலி சுவரொட்டிகளும் பதாதைகளும் வெள்ளைக்கொடிகளும் காணப்படுகின்றன.
இறுதிச் சடங்கை முன்னிட்டு இப்பகுதி எங்கும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், படையினரின் ரோந்து நடவடிக்கையும் இடம்பெற்று வருகிறது.