சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று ஈழம் வேண்டுமா, அதிகாரப் பரவலாக்கம் வேண்டுமா அல்லது மகிந்த சிந்தனைதான் வேண்டுமாவென மக்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் உங்களுக்கு சரியான பதிலை சொல்வார்களெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், இணைந்த வட, கிழக்கிற்குள் எமக்கு சுயாட்சி தராவிட்டால் இந்த நாட்டில் பிரிவினை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாதெனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சம்பந்தன் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தை குவித்து தமிழ்க் கைக் கூலிகளின் உதவியுடன் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு அரசாங்கம் துரிதமாக செயற்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்ற சிங்கள இனவாதிகள் கடினமாக முயற்சிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவத்தினருக்கு அங்கேயே வீடுகள் அமைக்கப்பட்டுவருகின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் தமிழ், முஸ்லிம் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. அத்துடன் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.
231 வேலையற்ற பட்டதாரிகள் அண்மையில் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட முஸ்லிமோ தமிழரோ இல்லை. கிழக்கில் 75 வீத தமிழர் இருக்கும் போது 100 வீத சிங்களவர்கள் வேலைகளில் இணைக்கப்படுகின்றனர். இலங்கையின் பொதுச் சேவையில் 8 வீத தமிழரே உள்ளனர்.
கிழக்கு மாகாணத்துக்கென நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. பிள்ளையான் என்பவரின் ஆயுதக் குழுவோடு இணைந்து கொண்டு தமிழ் மக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக உலகுக்கு காட்ட அரசு முயற்சிக்கின்றது.
கருணாவை தமது தேவைக்கு பாவித்து விட்டு, தற்போது இந்த அரசாங்கம் கசக்கி எறிந்துவிட்டது. பிள்ளையானுக்கும் இந்த நிலை தான் விரைவில் ஏற்படும். ஆனால் பிள்ளையானை லண்டனுக்கு அனுப்ப முடியாது. ஏனெனில் லண்டன் இனிமேல் விசா கொடுக்காது. ஆகையால், வேறு ஏதாவது ஒரு நாட்டுக்குத்தான் அனுப்பவேண்டும்.
ஆயுதக் குழுவோடு ஒப்பந்தம் செய்து, தேர்தலில் போட்டியிடும் ஒரேயொரு அரசு, இந்த அரசு மட்டும் தான். இந்த விடயத்தில் ஆயுதக் குழுவை நான் குற்றம் சாட்டவில்லை. அவர்கள் ஜனநாயக வழிக்கு வரவேண்டும். ஆனால் அரசாங்கம் அவர்களை தவறாகப் பயன்படுத்துகிறது.
ஆயுதக்குழுக்களின் ஆயுத பலத்தை தவறாகப் பயன்படுத்தி தமிழ் மக்களை கட்டாயப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. கிழக்கில் மகிந்த சிந்தனையை முன்னெடுக்கப் பார்க்கின்றது.
சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று ஈழம் வேண்டுமா, அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய சுயாட்சி வேண்டுமா, இல்லை மகிந்த சிந்தனைதான் வேண்டுமா எனக் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு மக்கள் சரியான பதிலைக் கூறுவார்கள். இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கிற்குள் எமக்கு சுயாட்சி வழங்காது விட்டால் உங்கள் ஒருவராலும் இந்த நாட்டில் பிரிவினை ஏற்படுவதை தடுக்க முடியாது.
கிழக்கை முற்று முழுதாக சிங்கள மயமாக்க சதி நடக்கிறது. கிழக்கில் தேர்தல்களை நடத்துகின்றனர். கிழக்கு முற்றுமுழுதாக இராணுவ மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எவ்வாறு ஜனநாயகம் இருக்கும்? எப்படி மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பார்கள்?
கிழக்கில் இடம்பெற்றுவரும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நஷ்ட ஈடு கொடுக்கப்படவில்லை. அவர்களின் இழப்புகளுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்க அரசு முன் வரவில்லை.
இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லாம் நன்றாக இருக்கின்றதென உலகுக்கு கூறுவதற்கு இங்கு சில பிரகிருதிகள் இருக்கின்றனர். ஆனால், தற்போதைய நிலையில், இலங்கையரசை நம்புவதற்கு சர்வதேச நாடுகள் தயாரில்லை.
சகல தரப்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்படுகின்றனர். அப்பாவித் தமிழ் மக்கள் விமானத் தாக்குதல்கள், பல்குழல் பீரங்கி தாக்குதல்களினால் தினமும் பலியாகின்றனர். இவற்றை முடிவுக்கு கொண்டுவர அரசு முயற்சிக்க வேண்டும்.