பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாதுகாப்பை காரணம் காட்டி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததையடுத்து, அதனை ஈடுகட்டும் வகையில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. பாகிஸ்தான் - பங்களாதேஷிடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஒரு நாள் போட்டி லாகூரில் நேற்று முன்தினம் பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. நாணயச் சுழுற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர் நசிர் ஜாம்ஷித் 20 ஓட்டங்களிலும், யூனிஸ்கான் ஒரு ஓட்டத்திலும், சல்மான் பட் 33 ஓட்டங்களிலும் வேகமாக ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்கள் என்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் அணியை, 4-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது யூசுப்பும், கப்டன் சொயிப் மாலிக்கும் காப்பாற்றினார்கள். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 145 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. சொயிப் மாலிக் 85 ஓட்டங்களில் (75 பந்து, 7 பவுண்டரி) வெளியேறினார்.
இதன் பின்னர் மிஸ்பா உல் - ஹக் அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் 300 ஓட்டங்களை கடக்க உதவியது. மிஸ்பா உல்ஹக் 27 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ஓட்டங்கள் விளாசினார். அப்ரிடி 11 பந்துகளில் தலா 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ஓட்டங்கள் விளாசி களத்திலிருந்தார். இதற்கிடையே முகமது யூசுப் தனது 15 - ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழுப்புக்கு 322 ஓட்டங்கள் குவித்தது. முகமது யூசுப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் 102 ஓட்டங்கள் குவித்தது குறிப்பிட்டத்தக்கது.
பின்னர் 323 ஓட்ட இலக்குடன் பங்களாதேஷ் அணி விளையாடிய போது, இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின்விளக்குகள் அணைந்தன. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், ஆட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது பங்களாதேஷ் அணி 39 ஓவர்களில் 282 ஓட்டங்கள் எடுக்க வேண்டுமென்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இதன்படி ஆடிய பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 29.5 ஓவர்களில் 129 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் 152 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக மோர்டசா 25 ஓட்டங்களும், நபீஸ் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் தன்விர், அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 2-ஆவது ஒரு நாள் போட்டி நாளை 11-ஆம் திகதி நடக்கிறது.