கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் பற்றிய பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. தென் ஆபிரிக்க அணியை கட்டுப்படுத்தும் வகையில், சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இதனை இந்திய கிரிக்கெட் மறுத்துள்ளது. சுழல், வேகப்பந்துவீச்சு ஆகிய இரண்டுமே எடுபடும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.
இந்தியா வந்துள்ள தென் ஆபிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. சென்னை டெஸ்ட் டிரா ஆனது. ஆமதாபாத் போட்டியில் வென்ற தென் ஆபிரிக்க, தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
கான்பூரில் மிக முக்கியமான மூன்றாவது டெஸ்ட் நாளை 11 ஆம் திகதி தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணி கட்டாயமாக வெற்றிபெற வேண்டும். டிரா அல்லது தோல்வியடைந்தால், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தை இழக்க நேரிடும். இதனை கணக்கில் கொண்டு சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
`சென்னை போட்டிக்கான ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சொர்க்கபுரியாக' இருந்தது. இதனால் சேவாக் 319 ஓட்டங்கள், டிராவிட் சதமடித்து அசத்தினர். பந்துவீச்சு சுத்தமாக எடுபடாததால், இப்போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் ஆமதாபாத் ஆடுகளம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இங்கு வேகப்பந்துவீச்சு சிறப்பாக எடுபட்டது. டேல் ஸ்டைன், நிற்னி, மோர்கல் `வேகத்தில்' அதிர்ந்துபோன இந்திய அணி, முதல் இனிங்ஸில் 76 ஓட்டங்களுக்கு சுருண்டு, பரிதாபமாக தோல்வியடைந்தது.
ஆமதாபாத் போட்டிக்குப் பின் பேட்டியளித்த ஹர்பஜன், ஆடுகளம் பற்றி கடுமையாக சாடினார்.
"அனைத்து நாடுகளும் தங்களுக்கு சாதகமாக ஆடுகளங்களை அமைக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது. சொந்த மண்ணில் நமது பலம் சுழற்பந்து வீச்சு தான் என்பதை மறந்து விடுகின்றனர்" என்று காட்டமாகக் கூறினார்.
இதையடுத்து கான்பூர் போட்டிக்கு சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அமைக்கும்படி இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டது. இதனை பி.சி.சி.ஐ. மைதானக் குழுத் தலைவர் தல்ஜித் சிங் மறுத்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்;
`ஒரு அணிக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட வாய்ப்பில்லை. கான்பூர் களம் சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். தொடக்கத்தில் வேகங்கள் சாதிக்கலாம். போகப் போக சுழற்பந்து வீச்சாளர்கள் தூள் கிளப்பலாம். சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அமைக்க வேண்டுமென ஹர்பஜன் கூறியது பற்றி எதுவும் தெரியாது. நாட்டில் ஆடுகளங்கள் பி.சி.சி.ஐ. விதிமுறைப்படி தான் அமைக்கப்படுகின்றன" என்றார்.