தடையை எதிர்த்து அக்தர் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நேர்மையான முறையில் நடைபெறுமென்று மேன்முறையீட்டு விசாரணைக் குழுத் தலைவர் உறுதியளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களின் நடத்தை விதியை மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தருக்கு அந்த நாட்டு கிரிக்கெட் சபை 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த தண்டனை சட்ட விரோதமானது என்று கண்டித்துள்ள அக்தர், தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அக்தரின் மேன்முறையீடு மீது விசாரணை நடத்த ஓய்வு பெற்ற லாகூர் நீதிபதி அப்தாப் பரூக் தலைமையில் 3 பேர் கொண்ட மறுவிசாரணை நடத்தும் தீர்ப்பாயத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அமைத்துள்ளது. முன்னாள் டெஸ்ட் வீரர் ஹசீப் அசான் முன்னாள் அமைச்சர் சல்மான் தசீர் ஆகியோர் தீர்ப்பாய குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற 2 உறுப்பினர்கள்.
அக்தரின் மேல்முறையீட்டு மனு விசாரணை எவ்வாறிருக்கும் என்பது குறித்து மறு விசாரணை குழு தலைவர் அப்தாப் பரூக் கூறியதாவது;
இந்த தீர்ப்பாயம் எந்த வித நெருக்கடியுமின்றி சுதந்திரமாக செயல்படும். விசாரணை நேர்மையான முறையில் நடைபெறும். இரண்டு தரப்பினரின் நியாயங்களையும் கேட்போம். இறுதி முடிவுக்கு வருவதற்கு முன்பாக இரண்டு தரப்பினரின் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ளப்படும்.
அக்தருக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. நான் ஓய்வு பெற்ற நீதிபதி, கொலை, கிரிமினல் உட்பட பல முக்கியமான வழக்குகளை விசாரித்திருக்கிறேன். எனவே இந்த வழக்கை கையாள்வது பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தீர்ப்பாயத்தில் பெரும்பான்மையோர் ஆதரவுப்படி முடிவெடுக்கப்படும். பெரும்பான்மையாளர் முடிவு தடையை நீக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டுமென்றிருந்தால், அதன்படி நடப்போம். ஒருமித்த கருத்துடன் இறுதி முடிவை எடுப்போம்.
தீர்ப்பாயம் தனது தீர்ப்பை குறைந்தது 7 நாட்களில் இருந்து அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். முதலில் இந்த வழக்கு மற்றும் அது சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் நான் படிக்க வேண்டும். அதன் பின் ஆரம்பக்கட்ட விசாரணை ஒரு வாரத்திற்குள் தொடங்குமென்று கருதுகிறேன். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இனி மேல் எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேனென்றார்.