கான்பூர் போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரை இழந்துவிடுமென்பதுடன், அதனால், டெஸ்ட் தரவரிசையில் 2 இடங்கள் பின்னடைவு பெற்று நான்காவது இடத்துக்கும் தள்ளப்பட்டுவிடும் .
ஆமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இனிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று தொடரில் 0-1 என பின்னடைவு பெற்றுள்ளது இந்தியா. தொடரின் 3 ஆவது மற்றும் கடைசிப் போட்டி கான்பூரில் நாளை 11 ஆம் திகதி தொடங்குகிறது.
கும்பிளே தலைமையிலான அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தற்போதைய 2 ஆவது இடத்தில் நீடிக்க முடியும். `டிராவோ' அல்லது தோல்வியோ கண்டால் இரண்டு இடங்கள் பின்னடைவு பெற்று 4 ஆவது இடத்துக்குத் தள்ளப்படும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்ரெய்னுக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. கான்பூர் போட்டியிலும் குறிப்பிடும்படியான விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் அவர் முதலிடத்தைப் பிடித்து விடுவார். தற்போது 897 புள்ளிகளைப் பெற்று இலங்கை வீரர் முத்தையா முரளிதரனுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.
முரளிதரன் 2006 பெப்ரவரியிலிருந்து முதல் இடத்திலிருந்து வருகிறார்.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர் மைக் ஹசி முதலிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கி பொண்டிங் , தென்னாபிரிக்க சகலதுறை வீரர் ஜக் கலிஸ் ஆகியோர் இணைந்து 2 ஆவது இடத்தில் உள்ளனர். இலங்கையின் விக்கெட் கீப்பர் குமார் சங்ககாரா 4 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
அதே சமயம் ஆமதாபாத் போட்டியில் மோசமாக விளையாடியதால் இந்திய வீரர்கள் சேவாக், டிராவிட் உள்ளிட்டோர் பின்னடைவு கண்டுள்ளனர்.