திபெத் மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், பீஜிங் ஒலிம்பிக் ஓட்டத்தை பாதியிலேயே ரத்து செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எந்த சக்தியாலும் ஒலிம்பிக் ஜோதியின் உலக பயணத்தை தடுக்க முடியாது என சவால் விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 8 ஆம் திகதி சீன தலைநகர் பீஜிங்கில் 29 ஆவது ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. இதில் திபெத் மற்றும் தாய்வான் அணிகள் சேர்ந்து `ஒருங்கிணைந்த சீன அணியாக' கலந்து கொள்ளும் என சீன அறிவித்தது. இதையடுத்து விடுதலை கோரி போராடி வரும் திபெத்தியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும்படி மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இந்தச் சூழலில் பீஜிங் ஒலிம்பிக் ஜோதி தனது உலக பயணத்தை தொடங்கியது. இது 20 நாடுகளை கடந்து மொத்தம் ஒரு இலட்சத்து 37 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்யவுள்ளது.
இந்த ஜோதி செல்லும் இடங்களில் எல்லாம் திபெத் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். லன்டனில் ஜோதியை பிடுங்கி அணைக்கப் பார்த்தனர். பாரிஸ் பயணத்தின் போது நிலைமை மோசமடைய, பாதுகாப்பு கருதி ஜோதி அணைக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ சென்ற போதும் திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிபல `கோல்டன் கேட்' பாலத்தின் `கேபிள்களில்' சிலர் ஏறி, திபெத்துக்கு சுதந்திரம் தரும்படி வாசகங்களை காட்டினர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட லாரல் சதர்லின் கூறுகையில், "ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடர்ந்தால், போராட்டமும் நீடிக்கும். திபெத் எல்லைக்குள் ஜோதியை எடுத்துச் செல்ல சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதித்தால், ரத்த ஆறு ஓடும்," என எச்சரித்தார்.
இப்படி உலகம் முழுவதும் திபெத்தியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பீஜிங் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை ரத்து செய்வது பற்றி சர்வதேச ஒலிம்பிக் குழு ஆலோசித்து வருகிறது. இதுபற்றி இன்று பீஜிங்கில் தொடங்கும் ஒலிம்பிக் குழுவின் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.