-சி.க.இந்திரராஜா-
1850 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலம் இலங்கையின் நிர்வாகம் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அரசாங்கத்தில் உத்தியோகம் பார்க்க விரும்பினால் ஆங்கில மொழியில் திறமைச் சித்தி இருக்கவேண்டும். அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை கிறிஸ்தவ மிஷன்மார் கற்பிக்கும் பாடசாலையிலேயே படிக்க வேண்டியிருந்தது. அதுமட்டுமல்லாமல் படிக்கவிரும்புவோர் கிறிஸ்தவர்களாகவே இருக்க வேண்டுமென்ற கட்டாயமும் இருந்தது. இந்நிலையில் சைவப் பிள்ளைகளாக இருந்த அநேகர் கிறிஸ்தவர்களாக மாறி ஆங்கிலக் கல்வியைக் கற்று வந்தனர். அவர்களில் ஒருவர்தான் யாழ். விக்ரோரியாக் கல்லூரியின் ஸ்தாபகரான நிற்சிங்கம் கனகரத்தினம் முதலியார். அப்பொழுது இவருடைய கிறிஸ்தவப் பெயர் மெக்கஸ்ரி கனகரத்தினம் என்று பதிவு செய்யப்பட்டது. இவர் 1869 ஆம் ஆண்டில் யாழ். கச்சேரிமுதலியாராகவும், யாழ். நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் இருந்த ஆங்கிலப் பிரபுகளுக்கு தமிழ்மொழிப் பெயர்ப்பாளராகவும் இருந்து வந்தார்.
இக்காலகட்டத்தில் ஆறுமுக நாவலர் அவர்கள் சைவசமயத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் கிறிஸ்தவர்களாக மாறியவர்களை படிப்படியாக சைவர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார். நிற்சிங்கம் கனகரத்தின முதலியாரும், ஆறுமுக நாவலரின் பணிவுடன் சேர்ந்து சைவ சமயத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன் பேறாக யாழ் நகரில் இருந்து மேற்கே பதினைந்து மைல் தூரத்தே உள்ள சுழிபுரம் என்ற தனது சொந்த ஊரில் கிராம மக்களும் ஆங்கிலக் கல்வியின் அறிவைப் பெருக்கவேண்டுமென்ற நோக்குடன் 1876 ஆம் ஆண்டு தனது எட்டு சார் (வீடு) இல்லத்தில் சைவ ஆங்கிலப் பாடசாலை ஆரம்பித்துக் காலையிலும் மாலையிலும் சில பிள்ளைகளைச் சேர்த்து வேதனம் எதையும் பெறாது ஆங்கிலக் கல்வியைக் கற்பித்து வந்தார். நாளடைவில் பிள்ளைகள் தொகை அதிகரிக்கவும் இரவிலும் வகுப்புக்கள் நடத்தத் தொடங்கினார். இரவில் தங்கிக் கற்கும் மாணவர்களுக்கு உணவு வசதியும் செய்து கொடுத்தார்.
இக்காலகட்டத்தில் அதாவது 1887 இல் பிரித்தானிய நாட்டு விக்டோரியா ராணியின் மூத்தமகன் ஏழாவது எட்வேட் கொழும்பிற்கு வந்தார். அவரை கௌரவிக்கும் முகமாக யாழ்ப்பாண மக்கள் மிகவும் அழகான முறையில் தங்க நகைகளை செய்து கனகரட்ணம் முதலியார் மூலம் இளவரசரிடம் ஒப்படைத்தார்கள். இச்சந்தர்ப்பத்தில் தான் சுழிபுரத்தில் இயங்கிவந்த சைவ ஆங்கிலப் பாடசாலை, இளவரசரின் அனுமதியுடன் விக்ரோரியாக் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டது.
கனகரத்தினம் முதலியார் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி நிர்வாகத்தை கொழும்பில் வெஸ்லிக் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த அவர்களது புதல்வன் செல்லப்பா விடம் ஒப்படைத்தார். மனேஜச்சராகப் பொறுப்பேற்ற செல்லப்பா மாணவர் தொகை அதிகரிக்கத் தொடங்க அதற்கேற்ற முறையில் கட்டிட வசதிகளையும் அதிபர், ஆசிரியர்களையும் திறமையான நிலையில் உள்ளவர்களையும் தேர்ந்தெடுத்தார். அதன் பேறாக ஆங்கிலப் பேராசிரியர் வில்லியம் சிமேல் என்பவரை அழைத்து அதிபராக்கியதன் பேறாக கல்லூரி உச்சக் கட்டத்திற்கு உயர்ந்தது.
அவரைத் தொடர்ந்து இந்திய நாட்டவரான நரசிம்ம நாயுடு, சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார், கலாநிதி சிவப்பிரகாசம், க.சிவராசா, பி.ஜி.தம்பியப்பா போன்ற சில திறமைசாலிகளை அதிபராக்கி வைத்திருந்தார். 1938 ஆம் ஆண்டு உயர்தரப் பாடசாலை தராதரப்பத்திர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1941 ஆம் ஆண்டு London matriculation exam ல் பல மாணவர்கள் சித்தி பெற்றனர். குறிப்பாக First class எ.அ. தவத்துரையும், விசேட சித்தியாக கே.சிவசுப்பிரமணியம், வி.இராஜசுந்தரம், எஸ்.சுப்பிரமணியம், இராஜேந்திரம், நவரட்ணம், குமாரசாமி போன்றோர் ஆவர்.
1943 ஆம் ஆண்டு மனேஜர் செல்லப்பா இறைபதம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து அவரது நெருங்கிய உறவினரான அமரர் ஆர்.தம்பையா (முன்னாள் தபால் அதிபர்) அவர்கள் முகாமையாளராகப் பொறுப்பேற்றார். 1945 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு முதல் மாணவன் தெரிவு செய்யப்பட்டார். (முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம்) 1946 ஆம் ஆண்டு பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றது. இதுவே முதலாவது அரசாங்கப் பாடசாலையாகும்.
1948 ஆம் ஆண்டு பாலர் மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. 1951, 1952 ஆம் ஆண்டுகளில் வகுப்பறைகள், உயர்தர வகுப்பிற்குரிய விஞ்ஞான ஆய்வுகூடங்களுடன் புதிய மண்டபம் (MMv type) கிணறு, நீர்த்தாங்கி என்பன நிர்மாணிக்கப்பட்டன.
கே.கனகரத்தினம் M.P. அவர்களது முயற்சியுடன் 1955 ஆம் ஆண்டு Gurugar மண்டபம் (ஆனந்த குருகே) நிர்மாணிக்கப்பட்டது. விளையாட்டு மைதானம் விஸ்தரிக்கப்பட்டது. சுற்று மதிலின் ஒரு பகுதி கட்டப்பட்டது. 1963 ஆம் ஆண்டு மனையியல் ஆய்வு கூடம் நிர்மாணிக்கப்பட்டது. சிவகாம சுந்தரி சுமேத நடராஜர் சிலை பிரதான மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. க.பாலச்சந்திரன் பொறியியற் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 1976 ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா (Big carnival) விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கு 2 மாணவர்கள் (செல்வி ஜி.பவானி, செல்வன் றமணன்) தெரிவுசெய்யப்பட்டார்கள். 1993 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் புனருத்தாரணம் செய்யப்பட்டது. அது கொழும்பு மற்றும் லண்டன், கனடா, பிரான்ஸ் அவுஸ்திரேலியா, ஜேர்மனி, ஓமான், டுபாய் ஆகிய நாடுகளில் தமது கிளைகளை ஆரம்பித்தது. 1988 ஆம் ஆண்டில் கல்லூரியின் நீர் விநியோகம் புதிய குழாய் மூலம் புனரமைக்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கல்லூரியின் நீர்த்தாங்கி புனரமைக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு ஆடி மாதம் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. மனேஜர் செல்லப்பாவின் உருவச் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டு Audio video room அமைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு I.C.T.( Information Communication Technology certre) நிலையம் அமைக்கப்பட்டது. தரம் 6 இல் ஆங்கிலமொழி மூலமான கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
விளையாட்டு மைதானம் விஸ்தரிப்பதற்கு (400 மீற்றர்) ஓடுபாதை, விஞ்ஞான கூடம் (G.C.E.O/L) நிர்மாணிப்பதற்கும் கனடா OBA அனுசரணையுடனும் க்ஓ கிளையின் அனுசரணையுடனும் விஞ்ஞான கூடம் (G.C.E.O/L) நிர்மாணிப்பதற்கும் கல்லூரியின் கிழக்குப் பகுதியில் உள்ள காணிகளும் கொள்வனவு செய்யப்பட்டது. World vision lanka இன் அனுசரணையுடன் விளையாட்டு மைதானத்திற்குப் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட காணி புனரமைக்கப்பட்டது. கல்லூரியின் 125 ஆவது நிறைவு நினைவு மலர் நாளை 12 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் கேட்போர் கூடத்தில் பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையினர் வெளியிடவுள்ளனர். இதில் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுள்ளனர்.