-மா.பா.சி. -
முற்போக்குச் சிந்தனையாளரும்; கலை, இலக்கியவாதியும் பிரபல வைத்திய கலாநிதியுமான டாக்டர் எம்.கே. முருகானந்தனின் 60 ஆவது அகவையையிட்டு; கொழும்பு-கலை, இலக்கிய நண்பர்கள் ஏற்பாட்டில் வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு கூடத்தில்; 06.04.2008 ஆம் திகதி விழாவொன்று நடைபெற்றது.
விழாவில் தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் தெரிவித்ததாவது.
தேவையானவர்களது தொலைபேசி இலக்கங்களைப் பதியும் பொழுது நான் அவர்களது பிறந்த தினத்தையும் பதிவதுண்டு. அப்பதிவின் மூலமாகவே வைத்தியகலாநிதி எம்.கே. முருகானந்தனின் பிறந்த திகதி 27.3.1948 என்பதை அறிந்து கொண்டேன். அவர் அறுபதாவது அகவையை எட்டுவதும் தெரிய வந்தது. எனது மாமனார் பிரபல எழுத்தாளர். அமரர் தென்புலோலியூர் சதாசிவம் இருந்திருந்தால் இந்நிகழ்வுக்கு அவரே தலைமை தாங்கி இருப்பார். டாக்டருக்கு அவரோடு நெருங்கிய தொடர்புகள் இருந்தன. தலைமை வகிக்கவிருந்த பேராசிரியர் .எஸ். சிவயோகம் முக்கிய அலுவலாக லண்டன் சென்றுள்ளார். எனவே தான் நான் தலைமை வகிக்க வேண்டி ஏற்பட்டது. இம்மண்டபத்தில் தான் கூட்டம் நடைபெறும் எனச் சொன்ன பொழுது; அம்மண்டபம் கொள்ளுமா? என நண்பரொருவர்கேட்டார். அதன் தாற்பரியத்தை இப்பொழுது உணர்கிறேன். இம்மண்டபம் முழுவதும் டாக்டரின் அபிமானிகள் நிறைந்திருக்கின்றனர்.
டாக்டர் முருகானந்தன் பருத்தித்துறை வியாபாரிமூலையில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை மேலப் புலோலிப் பாடசாலையில் பெற்றார் ஹாட்லிக் கல்லூரியில் இடைத்தரக் கல்வியைப் பெற்றுக் கொண்டு கொழும்பு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டத்தைப் பெற்று வைத்திய கலாநிதியானார். அரச ஆஸ்பத்திரிகளில் கடமை புரிந்து பின்னர் பருத்தித்துறை மருதடியில் தனியார் மருத்துவ நிலையத்தை அமைத்து வைத்திய சேவை புரிந்தார். 1997 இல் கொழும்புக்கு இடம் பெயர்ந்தார்.
புத்தக அறிமுக விழா ஒன்றிற்கு அழைக்கச் சென்றேடாக்டரை முதன் முதலில் சந்தித்தேன். இது 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. அன்று கண்ட பண்புகளோடேயே இன்றும் காணப்படுகிறார். இத் தன்மைதான் அவரையொரு சாதனையாளராக்கியது.
வைத்தியப்பாணியில் அவர்கடைப்பிடிப்பது உளவியல் அணுகு முறை. நோயாளிகளோடு பேசும் வார்த்தையில் பாதி நோய் சுகமாகிவிடும். இத்தன்மையே அவரைக் கொழும்பிலும் அதிக செல்வாக்கைப் பெற வைத்தது. "எயிட்ஸ்" குறித்து டாக்டர் முருகானந்தன் எழுதிய நூலே அவ்விடயத்தில் வெளிவந்த முதல் நூல். மருத்துவத் துறை சார்ந்த கல்விமான்கள் இலக்கியத்தில் பிரகாசிப்பது அரிது. இவர் புரியத்தக்க வகையில் எழுதுகிறார். எனவேதான் எல்லோராலும் வாசிக்க முடிகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய "முரசொலி"என்ற பத்திரிகையில் "வைத்திய கவசம்" என்ற பத்தியை எழுதினார். நலவியல் சார்ந்த தொடர். 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். "சாயி மார்க்கம்" எனும் சஞ்சிகையின் ஆசிரியர் அசாதாரணத் துணிவோடு "அறிவோர் கூடல்" என்ற அரங்கைத் தனது இல்லத்தில் நடத்தினார். இலங்கை சாஹித்திய பரிசைப் பெற்ற இவரது "நீங்கள் நலமா" என்ற நூல் 5 பதிப்புகளைக்கொண்டது. ஹாய் நலமா? என்ற பத்தி மற்றும் "ஜீவநதி" சஞ்சிகையில் எழுதும் கட்டுரைகள் புதிய பரிமாணத்தோடு வருகின்றன. தனது நூல்களின் வெளியீட்டை மிகவும் எளிமையாகவே நடத்துவார். முதல் பிரதியைப் பெற வர்த்தகர்களை அழைக்கமாட்டார். பெற்றோர் அல்லது அவரது ஆசான்களே பெறுவர். இதுவரை பதினொரு நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவைகளுள் இரண்டுக்குச் சாஹித்திய மண்டலப் பரிசும் கிடைத்துள்ளது.
நடிப்பிலும் கூட ஆர்வம் காட்டியிருக்கிறார். தனது இலக்கிய முயற்சிகளை அச்சில் மட்டுமன்றி இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இலங்கை வானொலி, சக்தி தொலைக்காட்சி என்பன நிகழ்ச்சிகளைக் கொடுத்திருக்கின்றன. டாக்டரின் படத்தை அட்டையில் பொறித்து மல்லிகை சஞ்சிகை டாக்டரைக் கௌரவித்திருக்கின்றது. செல்வி ஷ்ரீதரன் என்ற மாணவி தனது பட்டப் படிப்புக்கு டாக்டரின் நலவியல் நூல்களை ஆய்வுக்கு உட்படுத்தி கட்டுரை சமர்ப்பிக்கவிருக்கிறார். இது நலவியல் துறையில் முருகானந்தனுக்கு கிடைத்த வெற்றியை உறுதிப்படுத்துகிறது. டாக்டரின் மணிவிழா குறித்த மலரொன்றை வெளியிட ஆயத்தங்கள் நடக்கின்றன. அவரது நண்பர்களிடமும் அபிமானிகளிடமுமிருந்து கட்டுரைகள் கோரப்படுகின்றன .
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
டாக்டர் முருகானந்தன் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். யாழ்ப்பாணத்தில் எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் டாக்டரைக் காணலாம். இங்கு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள் இலக்கியவாதிகளாக இருக்கின்றனர். அமரர் டாக்டர் நந்தி மற்றவர் எம்.கே.எம். முருகானந்தன்.
டாக்டரின் அறுபதாவது அகவை விழாவை மல்லிகைப் பந்தலால் நடத்தத் திட்டமிட்டோம். ஹற்றனில் நடத்தப் போவதாகக் கூறி அந்தனி ஜீவா தடுத்தார்.எழுத்தாளனுக்குப் பிரச்சினையாகில் எழுபது எண்பதுகளில் இலக்கியவாதிகள் துடிப்போம். எங்களோடு சேர்ந்து வராமல் எமது நிகழ்வுகளில் பங்குகொள்ளாத எந்தக் கொம்பனையும் மதிக்க மாட்டோம். எமக்கு இலக்கியமும் உழைப்புமே முக்கியம். இந்த கூட்டத்துக்கு ஏன் நான் அல்லது நீர்வை பொன்னையன் தலைமை தாங்கக் கூடாது? முருகானந்தனின் எழுத்தை விட யாழ்ப்பாணத்தில் அவரது ஏற்பாட்டில் நடைபெற்ற அறிவோர் கூடல் பிரமாதமானது.
மாலைகொண்டு வந்தேன் இங்கு பொன்னாடை வேண்டாம், பூமாலை வேண்டாம் என்கின்றனர். அப்போ எப்பொழுது இலக்கியவாதிகளை வாழ்த்தப் போகின்றீர்கள்? டாக்டரின் உழைப்புக்குப் பின்னால் அவரது மனைவி இருக்கிறார். வழி காட்டுகிறார். அறிவுத் தளத்தை விரிவுபடுத்த உதவுகிறார்.
உளவள நிபுணர் புனைகதைப்படைப்பாளி கோகிலா மகேந்திரன் :-
யார் சிறந்தவர்? யார் ஆளுமைமிக்கவர்? என்ற தேடல் எனக் குண்டு. எம்.கே.முருகானந்தத்தை எனக்கு இருபத்தைந்து ஆண்டுகளாகத் தெரியும். 1995 ஆம் ஆண்டிலிருந்து எங்கள் குடும்ப வைத்தியர். இலக்கியக்காரர்கள் மத்தியில் வித்தியாசமானவர் விடயங்களை உள்வாங்கும் பொழுது விஞ்ஞானத் தன்மையோடு உள்வாங்குவார். அவரிடம் தெளிவு இருக்கிறது. தன்னை யாரென்று? அவருக்குத் தெரியும். நிறையச் செய்து விட்டுப் புகழைத் தேடாதவர். இவர்களைச் சரியென நான் சொல்ல மாட்டேன். எதைச் சரியெனத் தான் நினைக்கிறாறோ அதையே எம்.கே.எம்.செய்வார். எவரது வலைகளிலும் விழ மாட்டார். இன்னொருவரைப் போல் தான் இருக்க வேண்டுமென விரும்பாதவர். அழகுசந்தோஷ் என்பதும் அவரது புனைப் பெயர். உடல் நலம், சமூக நலம், ஆன்மீகம் என்ற சமன்பாடுகளோடு வாழ்கிறார்.அவருக்கு கோபம் வந்தது எனக்கு நினைவில்லை பார்வையில் நேர்மை உண்டு. அவரது முதுமை ஆரோக்கியமாகவே இருக்கும். அவரது தொழிலின் மூலப் பொருள் தொடர்பாடல். அடுத்தவரைப் புரிந்திருக்கத் தெரிந்திருக்க வேண்டும். எம்.கே.எம்மைப்பற்றி எவருமே குறை சொன்னதை நான் கேட்டதில்லை. நிபுணர்களால் கை விடப்பட்டவர்கள் எம்.கே. எம்மிடம் சுகம் பெற்றிருக்கின்றனர். ஒன்றும் தெரியாதவர்களே நிறையக் கதைப்பார்கள். அமைதியானவர்கள்.
பிரபல எழுத்தாளர், ஆய்வாளர் தெளிவத்தை ஜோசப்:-
நான் டாக்டர் முருகானந்தத்திடம் ஒரு போதும் மருந்துக்குச் சென்றதில்லை. நான் சிறிது சுகவீனமுற்று இருந்த பொழுது அடிக்கடி என்னை வந்து பார்த்தார். எழுத்தாளனைப்பார்க்க வரும் பண்போடு வந்தார். எம்.கே.எம்.மின் புத்தகங்கள் மருத்துவத்தை இலகுபடுத்துபவை. அவரது புத்தகங்களிலொன்று டாக்டரின் டயறிக் குறிப்பிலிருந்து என்ற அநுபவக் குறிப்புகள் அநுபவத்தை அநுபவமாகவே குறிப்பிடும் பொழுது ஒரு எழுத்தாளன், கலைஞன் எப்படி உருவாகிறான் என்பது புரிகின்றது. சிறந்த படைப்பாளிக்குரிய நடை. அவரது ஆளுமையைக் கணிக்கவைக்கிறது இந்நூல். மனிதரை, இலக்கியவாதியை , எழுத்தாளரைக் கௌரவித்து மதிக்கத் தெரிந்தவர். மல்லிகையின் 25 ஆவது ஆண்டு விழாவுக்குத் தலைமைவகிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் சம்பந்தனைச் சந்தித்தேன். டாக்டர் முருகானந்தன் என்னைத் தன் வீட்டிற்குச் கூட்டிச் சென்றார். நலவியல் புத்தகங்களில் டயறிக் குறிப்புகள் டாக்டரைக் கலைஞனாக இலக்கியவாதியாக அத்தாட்சிப்படுத்துகிறது. எம்.கே.எம் வாசகரைச் சிந்திக்கவைத்தவர்.
(தொடரும்)