இராணுவ தீர்வில் அரசு கொண்டுள்ள நாட்டத்தால் ஏற்பட்டிருக்கும் நிலைமை
இலங்கையில் காணப்படும் நீண்டகால இனப் பிரச்சினைக்கு அரசாங்கம் இராணுவத் தீர்வுகாண முயற்சி மேற்கொள்வதால் தோன்றியுள்ள மனித உரிமை மீறல் பிரச்சினைகளின் விளைவாக ஐரோப்பிய சந்தைகளில் இலங்கை ஆடைகளுக்கு வழங்கப்பட்டுவரும் வரிச் சலுகைகள் நிறுத்தப்படலாம் என்று ஆடை உற்பத்தியாளர்கள் அச்சம் கொண்டுள்ளார்கள்.
ஜி.எஸ்.பி.+ எனக் கூறப்படும் ஐரோப்பிய ஒன்றிய வரிச் சலுகைகள் இந்த வருட முடிவில் காலாவதியாவதால் அக்டோபர் மாதத்தில் இதுபற்றி மீள்பரிசீலனை செய்யப்பட இருக்கிறது.
மனித உரிமைகள், தொழில் உரிமைகள், சுற்றாடல் தரம் ஆகியன தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதைப் பொறுத்தே தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகளில் வரிச்சலுகை வழங்குவது தங்கியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. வரிச்சலுகையை தொடர்வது இந்த உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதில்தான் முற்றுமுழுதாக தங்கியுள்ளது. நடைபெறவிருக்கும் மீள்பரிசீலனை இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பான சோதனையாக இருக்கும். அதாவது சட்டங்களை வைத்திருந்தால் மட்டும் போதாது அவற்றை அமுல் செய்தாக வேண்டுமென இலங்கைக்கான ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.பி.+ சலுகைத் திட்டத்தின் கீழ் அநேகமான சகல இலங்கை உற்பத்திப் பொருட்களையும் ஐரோப்பிய சந்தைகளுக்கு தீர்வையின்றி ஏற்றுமதி செய்யலாம். வரிச்சலுகையால் அனுகூலம் பெறும் உற்பத்திகளில் ஆடை உற்பத்திகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய வில்சன், இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களுக்கு சுயாட்சி கோரி விடுதலைப் புலிகள் அரசாங்க படைகளுடன் நடத்திவரும் போராட்டம் காரணமாக இந்த மீள்பரிசீலனை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற குற்றச்சாட்டை நிராகரித்தார்.
ஐரோப்பாவில் நடத்தப்பட்ட பல சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, நோர்வேயின் மத்தியஸ்தத்தில் விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் ஜனவரி மாதத்தில் ஒருதலைப்பட்சமாக ரத்து செய்தது. 20 மில்லியன் மக்கள் வாழும் இந்தத் தீவு நாட்டில் 11.9 சதவீதமான தமிழரும் 74 சதவீதமான சிங்களவரும் வாழ்கின்றார்கள்.
27 உடன்படிக்கைகளையும் அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என்று வில்சன் தெரிவித்தார். இதற்கும் நாட்டில் நிலவும் பிரச்சினைக்கும் தொடர்பில்லை. உடன்படிக்கைகளை அங்கீகரித்து அவற்றை அமுல் செய்வதில்தான் தங்கியுள்ளது. யுத்தத்தையோ ஏனைய உள்நாட்டுப் பிரச்சினைகளையோ இதற்கு காரணமாகக் கூற முடியாதென்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்துவரும் அரசியல் ஆட்கடத்தல்கள் ஆகியவற்றை வரிச்சலுகைத் திட்டத்தை நிறுத்துவதற்கான ஒரு காரணமாக பயன்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
நான்கு இணைத்தலைமை அமைப்புக்களில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் புனர்நிர்மாண, அபிவிருத்தித் திட்டங்களுக்கென 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக உறுதியளித்திருந்தது. ஆனால், இந்த உதவி வழங்குவது இலங்கையில் மனித உரிமை பேணலில் காணப்படும் முன்னேற்றத்தில்தான் தங்கியுள்ளது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை வில்சன் மறுத்தார். இலங்கையுடன் 300 வருடகால வர்த்தக தொடர்புகளை தாங்கள் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சுயவிருப்பத்தின் பேரில் இத்தகைய தொடர்புகளை துண்டித்துவிட முடியாது. எனவே, சகல நடவடிக்கைகளும் முழுமையான தொழிற்புலமை அடிப்படையிலேயே நோக்கப்படும். அரசியல் விளையாட்டுக்கள் எதுவும் இதில் கிடையாது என்றும் அவர் கூறினார்.
கடந்த மாதம் ஆடை உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐரோப்பிய ஒன்றியம் எழுப்பிய சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பற்றி ஆராய்வதற்கென அரசாங்கம் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
மார்ச் மாத நடுப்பகுதியில் வெளியுறவு, ஐரோப்பிய அயலக கொள்கைக்கான ஐரோப்பிய ஆணையாளர் பெனிற்றா பெரேறோ- வோல்ட்னர் உட்பட பலரை சந்திப்பதற்காக வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான தூதுக்குழு ஒன்று ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றது.
இலங்கையில் ஆடை உற்பத்தித் துறையிலேயே பெரும் தொகையானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள். பெரும்பாலும் கிராமப்புற பெண்கள் உட்பட சுமார் 3 இலட்சம் பேர் இத்துறையில் வேலை செய்து வருகிறார்கள். வரிச் சலுகை நிறுத்தப்பட்டால் இலங்கை ஆடைகளின் போட்டித் தன்மை பாதிக்கப்படுவதுடன் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி வருமானம் ஆகியனவும் வீழ்ச்சி அடையும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
வரிச்சலுகை மேலுமொரு தவணைக்கு அங்கீகரிக்கப்படாவிட்டால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து அமைச்சர் பீரிஸ் கடந்த வாரம் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு விபரித்துக் கூறினார். இந்த சலுகையைப் பெற்று, நாடு சுபிட்சமடைவதற்கு தடையாக தமிழ்த் தீவிரவாதிகளும் நாட்டின் அரசியல் எதிர்க் கட்சியினரும் பிரசாரம் செய்துவருவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அரசியலில் சூடு பிடிக்கவே, இத்துடன் பரிச்சயமான தொழிற்சங்கங்கள் 2003 ஆம் ஆண்டில் வரிச்சலுகை முதல் முதல் அங்கீகரிக்கப்பட்ட போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட அறிவுரைகள் அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளன.
2005 ஆம் ஆண்டில் வரிச்சலுகை புதுப்பிக்கப்படும் காலம் வந்தபோது, 2004 டிசம்பர் மாத சுனாமியினால் நாடு பாதிக்கப்பட்டதாலும் அமெரிக்கா வழங்கிய ஆடைக் கோட்டாக்கள் முடிவடைந்ததாலும் ஒரு இழப்பீட்டு அடிப்படையில் வரிச்சலுகையை புதுப்பிக்குமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்தது.
தொழில் தருநர்களும் அரசாங்கமும் அடிப்படை தொழில் உடன்படிக்கைகளை மீறியதால் வரிச்சலுகையினால் அவை அனுகூலம் பெறக்கூடாதென உள்ளூர் தொழிற் சங்கங்கள் முன்னர் தெரிவித்த போதிலும் கடந்த மாதம் தொழிற் சங்கங்களிடமிருந்து அரசுக்கு எதிர்பாராத வகையில் ஆதரவு கிடைத்தது.
தொழில் தரத்துக்கு இவை ஏற்றவையாக இல்லை. ஆனால், இலங்கை வரிச்சலுகையை இழக்குமானால் அதன் தாக்கம் தொழிலாளர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வரிச்சலுகை நிறுத்தப்படுவதை நாம் விரும்பவில்லை. ஆனால், இணை தொழில் தரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று சுதந்திர வர்த்தக வலயங்களினதும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தினதும் பொதுச் செயலாளர் அன்ரன் மார்கஸ் தெரிவித்தார்.
கடந்த மாதம் கொழும்புக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு ஒன்றை தொழிற் குழுக்கள் சந்தித்ததாக மார்கஸ் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள் பின்பற்றப்பட்டு இந்த விடயத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டால் விசேட சலுகையை நீடிப்பதற்கான அரசின் கோரிக்கையை தாங்கள் ஆதரிப்பதாக தொழிற் குழுக்கள் தெரிவித்தன. தொழிலாளர்கள் அவர்களது உரிமையை பெறும் பட்சத்தில் இதற்கு ஆதரவு தெரிவிப்பதில் தங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லையென்றும் அவை தெரிவித்தன. அறிவுரைகளில் ஒன்று ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமையும் கூட்டு பேரம் பேசலுமாகும் என்று தொழிற் குழுக்கள் தெரிவித்தன.
2003 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட மூல உடன்படிக்கையின்படி சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை உட்பட 27 சர்வதேச உடன்படிக்கைத் தொகுதியை அங்கீகரித்து முழுமையாக அமுல்செய்யும் கடப்பாடு இலங்கைக்கு உண்டு.
சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு முன்னதாகவே இலங்கை இந்த உடன்படிக்கைகளில் பலவற்றை அங்கீகரித்த போதிலும் அவற்றை அமுல் செய்வது தொடர்பாகவே தொழிலாளர்கள் கவலை கொண்டுள்ளார்கள். இந்த உடன்படிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டபோதும் அவற்றை அமுல் செய்வதுதான் பிரச்சினையாக இருக்கிறது என்று மார்கஸ் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஆடை வர்த்தகம் தொடர்பான கூட்டமொன்றில் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் உரையாற்றிய போது, இலங்கையின் பலவீனமான பொருளாதாரம் மற்றும் நீதியான உற்பத்தித் தரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வர்த்தக சலுகையை வழங்குமாறு கோரி அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களை திருப்திப்படுத்த இலங்கை முயற்சி மேற்கொள்ளும் அதேவேளை, நாட்டின் மனித உரிமை பேணல் விவகாரம் ஏனைய அனைத்தையும் மூடி மறைத்து விடுகிறது என்று கூறினார்.
இந்த வருடம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை சம்பாதிக்குமென எதிர்பார்க்கப்படும் இலங்கை ஆடை உற்பத்தித்துறையின் மிகப் பெரும் சந்தை வாய்ப்பு அமெரிக்காவிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஐ.பி.எஸ்.