ஜனாதிபதி பதவியிலிருந்து தான் விலகினால் பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகள் மீது அமெரிக்கா நேரடியான தாக்குதல்களை ஆரம்பிக்குமென பாகிஸ்தான் ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இச் செய்தியை வெளியிட்டுள்ள அந்நாட்டு பத்திரிகையொன்று முஷாரப் பதவி விலகுவதனால் பலுசிஸ்தான் துறைமுகத் திட்டங்கள் பாதிப்படைவதுடன், சீரடைந்துள்ள சீனாவுடனான உறவுகள் பின்னடைவை சந்திக்குமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
முஷாரப் பதவி விலகுவதால் எதிர் மறையான விளைவுகள் ஏற்படுமென்பதால் அவரது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் பதவி விலகும் நோக்கமெதுவும் அவருக்கில்லை எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், பதவியில் தொடர்ந்து நீடிக்கும் அவரது தீர்மானம் அவரது சொந்த நலனை விட நாட்டின் நலன் கருதியதே எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி அப்துல் காதர் கான் அணுவாயுத இரகசியங்களை வெளி நாடுகளுக்கு கடத்தியமை தொடர்பான விசாரணைகளுக்கு அமெரிக்காவின் தலையீட்டை முஷாரப் அனுமதிக்கவில்லை என்பதையும் இச் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், முஷாரப்புக்கும் புஷ்ஷுக்குமிடையில் தனிப்பட்ட ரீதியான உறவு பலமாக இருப்பதனாலேயே அல்- ஹைடா மற்றும் தலிபான்களின் புகலிடமாகக் கருதப்படும் பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்பதையும் அதிகாரிகள் நியாயப் படுத்தியுள்ளதாக அச் செய்தி தெரிவிக்கின்றது.