ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக துருப்புகளை அனுப்புவதாக உறுதியளித்துள்ளதன் மூலம் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கொலஸ் சார்கோஸி தனது தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டுள்ளதாக தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் படைகளை விலக்கிக் கொள்வதாக சார்கோஸி உறுதியளித்தமையினாலேயே கடந்த வருடம் பிரான்ஸைச் சேர்ந்த தன்னார்வ பணியாளர்கள் இருவரை தாம் விடுதலை செய்ததாக இப் போராளிக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களின் போது பிரான்ஸ் படைகளை ஆப்கானில் நீண்ட காலம் வைத்திருக்கப் போவதில்லையென சார்கோஸி உறுதியளித்திருந்தார்.
ஆனால், கடந்தவாரம் ஆப்கானுக்கு 700 மேலதிக துருப்புகளை அனுப்பி வைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த தலிபான்களின் பேச்சாளர்;
ஆப்கானிலிருந்து படைகளை விலக்கிக் கொள்வதை மையப்படுத்தியே சார்கோஸி பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், கடந்த வாரம் ரோமானியாவின் தலைநகர் புகாரெஸ்டில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆப்கானிலுள்ள படையினரை அதிகரிக்கும் திட்டமானது எமது போராளிகளை தோற்கடிக்காது. கடந்த காலங்களில் ஏனையவர்கள் தோற்கடிக்கப்பட்டது போன்று கடவுளின் ஆசியுடன் ஆக்கிரமிப்பாளர்களும் தோற்கடிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது நேட்டோவின் 47,000 துருப்புகள் ஆப்கானில் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.