சிம்பாப்வேயில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை வெளியிடுவது ஆபத்தானதென அந்நாட்டு தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அங்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அம் முடிவுகளை வெளியிடக் கோரி பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இவ் வழக்கில் தேர்தல் ஆணையகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தல் முடிவுகளை வெளியிடுமாறு தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவிடுவது ஆபத்தானதெனவும் அதற்கு மேல் எதனையும் விரிவாகக் கூறமுடியாதெனவும் தெரிவித்தார்.
கடந்த 28 வருடங்களாக அந்நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் ரொபேர்ட் முகாபே மறுதேர்தல் நடத்துவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கான அவகாசத்தைப் பெறுவதற்காகவே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதை தாமதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.