பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் கூறி இந்து இளைஞரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்தவர் ஜகதீஷ் குமார். 22 வயதான அவர் மீர்புர்காஸ் நகரில் வசித்து வந்தார். அவர் ஒரு தோல் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். வேலைபார்க்கும் இடத்தில் நண்பர்களுடன் மதம் பற்றி விவாதித்தபோது, இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் சொற்களை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சக தொழிலாளர்கள் அவரை அடித்தே கொன்றுள்ளனர்.
கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கும் மேலாக அவர்கள் அடித்து உதைத்தனர். அவர் அடி தாங்கமாட்டாமல் இறந்துபோனார். அவர் இறந்துபோய்விட்டார் என்று தெரிந்தபிறகே அவர்கள் அடிப்பதை நிறுத்தினார்கள். இதுபற்றி பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததும் பொலிஸார் அந்த தொழிற்சாலைக்கு விரைந்தனர். தொழிற்சாலை பகுதியில் பதற்றம் நிலவியது. பொலிஸார் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வருவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர்.
ஜகதீஷ் கொல்லப்பட்டதற்கான காரணத்தை அவரது குடும்பத்தினர் ஏற்கமறுத்துவிட்டனர். கொலைக்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் இருக்கமுடியாது என்று கூறிய அவர்கள், முஸ்லிம் சமுதாயத்தில் வாழும் பிற மதத்தினர் நபிகள் நாயகத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ குறை சொல்லமுடியாது. எனவே, அப்படி எல்லாம் ஜகதீஷ் பேசியிருக்கமாட்டார். எனவே பொலிஸார் சக தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்று அவர்கள் கோரினார்கள்.