இரு மாதங்களுக்கு முன்னர் ஒரு தலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொண்ட கொசோவோவின் பாராளுமன்றம் புதிதாக வரையப்பட்ட அரசியலமைப்பு சாசனத்தை அங்கீகரித்துள்ளது.
இவ் அரசியலமைப்பு கொசோவோவின் சுதந்திரத்தை கடுமையாக எதிர்க்கும் சேர்பியர் போன்ற சிறுபான்மை இனங்களை பாதுகாப்பதற்கான சாசனத்தையும் உள்ளடக்கியுள்ளது.
கொசோவோ என்ற தனி நாட்டிடம் ஐக்கிய நாடுகள் அதிகாரங்கள் முழுவதையும் கையளிக்கவுள்ள ஜூன் 15 இல் இவ் அரசியலமைப்பு அமுலுக்கு வரவுள்ளது.
இதேவேளை, இச்சாசனத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் சட்ட ரீதியற்ற நடவடிக்கையென கொசோவோ விவகாரங்களுக்கான சேர்பிய அமைச்சர் பெல்கிரேட்டில் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தலைநகர் பிறிஸ்டினாவிலுள்ள பாராளுமன்றத்தில் நடைபெற்ற விஷேட கூட்டத்தொடரில் இப் புதிய அரசியல் சாசனம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
சம அந்தஸ்துள்ள சமுதாயமொன்றை உருவாக்குவதற்கான பொறுப்புகளை இப்புதிய நாட்டின் சாசனம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி பட்மிர் செஜ்டியு:
சேர்பியர்களும் கொசோவோவின் குடிமக்களே. இச் சாசனம் அவர்களுக்குமுரியது. சேர்பியர்கள் நாட்டின் முக்கியமான அஸ்திபாரமாகவும் சேர்பியாவுடன் எதிர் காலத்தில் சிறப்பான உறவை பேணுவதற்கான பாலமாகவும் இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.
1999 இலிருந்து ஐ.நா. வின் நிர்வாகத்தின் கீழிலிருந்து வரும் கொசோவோ அதிகாரம் முழுவதையும் ஐ.நா.விடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு வழியமைக்கும் நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது.
கடந்த பெப்ரவரியில் கொசோவோ மேற்கொண்ட ஒருதலைப் பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகளவான நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட 40 இற்கும் அதிகமான நாடுகள் அங்கீகரித்திருந்தன.
கொசோவோவை தனது மாகாணமெனக் கூறிவரும் சேர்பியாவும் ரஷ்யாவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.