பிரதியமைச்சர் வடிவேல் சுரேஸின் வேண்டுகோளையடுத்து பண்டாரவளை கிறேக் தோட்டத்தில் குவிக்கப்படிருந்த பொலிஸார் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
கிறேக் தோட்டத்தில் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலை நிறுத்தத்தினையடுத்துப் பொலிஸார் அத் தோட்டத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இது சம்மந்தமாக தோட்டத் தொழிலாளர்கள் பிரதி சுகாதார அமைச்சரிடம் முறையிடவே, பிரதி அமைச்சர் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளையடுத்து தோட்டத்திலிருந்து பொலிஸார் அகற்றப்பட்டனர்.
தொழிலாளர்களின் கொழுந்துக் கூடைகளுக்கு 250 ரூபா என்ற அடிப்படையில் அவர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டமையையும், தொழிலாளர்களின் ஊக்குவிப்புக்குரிய கொடுப்பனவுகள் தொழிலாளர்களின் சம்பளத்துடன் சேர்க்கப்படாமையையும் ஆட்சேபித்தே, கிறேக் தோட்டத்தின் சுமார் அறுநூறு தொழிலாளர்களும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்தும் இவ் வேலை நிறுத்தம் இடம் பெற்று வருவதனால், பிரதி அமைச்சரும் பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ், கிறேக் தோட்டத்தைப் பொறுப் பேற்றிருக்கும் தோட்ட நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் சுசில் ஜெயக்கொடியுடன் தொடர்பு கொண்டுள்ளார்.