* பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா
நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் கிழக்கில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கவும் அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்துகின்றது என்று சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கண்டியில் பைசர் முஸ்தபா பவுண்டேசனின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு, தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. எனவே கிழக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை ஜனநாயக வழிமுறையினூடாக தெரிவு செய்து அபிவிருத்தி வேலைகளின் பயன்களை அடைந்து கொள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வழி செய்யும்.
இலங்கையர்களாகிய நாம் இலங்கையர் என்ற தேசிய உணர்வுடன் செயற்பட வேண்டும். இனரீதியான அணுகுமுறைகள் நாட்டை பாதாளத்திற்குக் கொண்டு செல்லும்.
கண்டி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இன, மத, மொழி, பேதமின்றி கணினிப் பயிற்சி பெற வாய்ப்புப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
இதன் மூலம் போட்டிமிக்க உலகில் இளைஞர் யுவதிகள் தொழிலொன்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
கல்வியும் தொழில்நுட்ப பயிற்சியும் வறுமையை அகற்ற உதவும் என்ற அடிப்படையில் அவற்றைப் பெற்றுக் கொள்ள நான் உதவுகின்றேன். இதில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் என்னிடம் இல்லை.
நான் பாடசாலைகளுக்கும் அறநெறிப் பாடசாலைகளுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கூடுதலான தொகையை ஒதுக்கீடு செய்யக் காரணம் சமூக மறுமலர்ச்சிக்காகவே என்றார்.
இவ்வைபவத்தில் இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் அலி ஹுசைன் டிடி மற்றும் அவரின் பாரியார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.