ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச பிரிவினர் அரசுடன் இணைய எடுத்த முடிவை விமர்சித்ததாலேயே, செவ்வாய்க்கிழமை அவர்கள் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரண பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்;
"மக்கள் விடுதலை முன்னணியின் விமல்வீரவன்ச பிரிவினர் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட அநுராதபுர மாவட்ட மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர வீரபத்திரண அரச பாதுகாப்பு பிரிவினரால் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேற்படி நிகழ்வில் இருந்து நாம் புரிந்துகொள்வது, மக்கள் விடுதலை முன்னணியின் விமல்வீரவன்ச பிரிவினர் மகிந்த அரசுடன் இணைய எடுத்த முடிவை ரணவீர பத்திரண விமர்சித்ததைத் தொடர்ந்தே அவருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது மாற்றுக்கருத்தினை கொண்டிருக்கும் சுதந்திரத்தை முற்றுமுழுதாக அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையாகும். விமல்வீரவன்ச பிரிவினர் மகிந்த அரசுடன் இணையமுன், அவர்களுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சி உறுப்பினர்களை அரச பயங்கரவாதத்தின் துணையுடன் முற்றுமுழுதாக அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இதேநேரம் வடக்கிலிருந்து கிழக்கை பிரித்து அங்கே தேர்தலை நடத்தும்போது பிள்ளையான் குழுவிடம் ஆயுதங்களை களையக்கூடாது என்பது விமல்வீரவன்சவின் நிலைப்பாடாகும். அதேவேளை தனது கட்சி உறுப்பினரை அரச பயங்கரவாதத்தின் துணையுடன் பலாத்காரமாக வெளியேற்றும் வீரவன்ச, கிழக்கு மாகாண மக்களுக்கு எவ்விதமான ஜனநாயகத்தினை வழங்குவார் என்பதே இன்றுள்ள கேள்வியாகும்".