இன ஒற்றுமைக்காகவும் நாட்டில் சமாதானத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளுக்காகவும் துணிச்சலுடன் குரல்கொடுத்து வந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இழப்பானது பாரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது என்று ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான வே. தங்கராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சிங்களவர், தமிழர், முஸ்லிம் என எவ்விதமான பேதமும் பாராது மூவின மக்களதும் மேம்பாட்டுக்காகவும், உயர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் அமரர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே.
அத்துடன், அவர் மூன்று மொழிகளிலும் புலமை பெற்றிருந்தமையால் பாராளுமன்றத்தில் பல சிறந்த விவாதங்களையும் நடத்தினார். அத்தகைய ஒருவரின் திடீர் மறைவானது ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், நாட்டுக்கும் பெரும் இழப்பாகும்.
தனது கடின உழைப்பு, நேர்மையான அரசியல் என்பவை மூலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரியவராகவும் இவர் திகழ்ந்து வந்தார்.
சிறந்த சட்டத்தரணியான அமரர் ஜெயராஜ், பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டவர்.
அவரது இந்த அகால மரணத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அவரை இழந்து தவிக்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள், கம்பஹா மாவட்ட மக்கள் மற்றும் சுதந்திரக்கட்சியின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.